கலைஞர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் கௌரவிப்பு

2012-09-10 14:48:23


  Share
 
 
 

வலி.தெற்குப் பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் நடத்தப்பட்ட கலாசாரப் பெருவிழாவில் கலைத்துறைக்கு சேவையாற்றிய கலைஞர்களுக்கு ஞான ஏந்தல் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

சோமசுந்தரம்பரமசாமி (இலக்கியம்), செல்லத்தம்பி பரமநாதன் (இலக்கியம்), வைரமுத்து சிவநேசன் (சமய இலக்கியம்), மூத்ததம்பி சிவலிங்கம் (சமய இலக்கியம்), ஆறுமுகம் தெய்வேந்திரம் (நாடகம்), உருத்திரமூர்த்தி பாலகிருஸ்னன் (நாதஸ்வரம்), நவரத்தினம் பரமேஸ்வரன் ( நாடகம்), திருமதி ஜெயந்தி (சுகிர்தன்) ஆகியோர் விருதுகளைப் பெற்றுள்ளனர்.

அத்துடன் சிறுப்பிட்டியில் 86 வயது மூத்தபிரஜைகள் இருவருக்கு வாழும்போதே ஊர்மக்கள் பாராட்டு விழாவெடுத்து கெளரவித்ததோடு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதி கொண்ட பொற்கிளி வழங்கி கௌரவித்தனர்.

இந் நிகழ்வு சிறுப்பிட்டி மக்களால் நடத்தப்பட்டுள்ளது. சிறுப்பிட்டியைச் சேர்ந்த சின்னையா வைத்தியலிங்கம் (பாட்டப்பா), தம்பு இரமநாதன் (சைவப்பா)ஆகிய இரண்டு முதியவர்களுக்கும் வயது 86.

இருவரும் தமது வாழ்நாளில் சிறுப்பிட்டி கிராமத்துக்கும் தமிழ் சமூகத்திற்கும் குறிப்பிடத்தக்க பணிகள், தொண்டுகளை மேற்கொண்டு சமூகத்தினால் மெச்சத்தக்க வகையில் வாழ்ந்தனர். இவர்கள் வாழ்நாளில் செய்து கொண்ட பங்கு, பணிகளைப் பாராட்டி விழா வெடுத்து கௌரவிக்கப்பட்டனர்.

இவர்களைக் கௌரவிக்கும் விழா கடந்த 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிறுப்பிட்டி கூட்டுறவு நகர் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் பிரதம விருந்தினராக வலி.கிழக்கு பிரதேச செயலர் எம்.பிரதீபன் கலந்துகொண்டார்.

மூத்த பிரஜைகள் இருவரையும் வாழும் காலத்தில் பாராட்டி கௌரவிப்பதற்கான ஏற்பாடுகளை சுவிஸ் வாழ் சிறுப்பிட்டி மக்களும் சிறுப்பிட்டி இணையத்தாரும் சிறுப்பிட்டி வாழ் பொதுமக்களும் இணைந்து மேற்கொண்டனர்.

முதியவர்களைப் பராமரிப்பதில் பெரும் இடர்பாடுகளை நோக்கி முதியவர் இல்லத்துக்கு அனுப்பிவைக்கும் இன்றைய காலச்சூழலில் ஊர்மக்கள் ஒன்றுதிரண்டு முதியவர்களை வாழும்போதே பாராட்டி பொற்கிளி வழங்கி கௌரவித்த செயற்பாடு குறிப்பிடத்தக்க முன்னோடி நிகழ்வு. இந்நிகழ்வு முன்மாதிரியான வைபவம் என விழாவில் கலந்தகொண்ட பிரமுகர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.


 
---------------------------------------------------------------------------------------------------
 
---------------------------------------------------------------------------------------------------
 
 
 
 

© 2012 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved
Powered by Virakesari Online
Comments/Feedback: editor@yarlmann.lk
yarlmann Facebook yarlmann twitter yarlmann Video