போரின் பின்னரான வன்னியும் தொடரும் அவல வாழ்க்கையும்

2012-09-19 10:38:15


  Share
 
 
 

"நெல் ஆடிய வயலெங்கே...
சொல் ஆடிய அவை எங்கே...
வில் ஆடிய களமெங்கே..
கல் ஆடிய சிலையெங்கே...
என் தாய் தின்ற மண்ணே!..' என்னும் நெஞ்சே உருக்கும் கவிஞர் வைரமுத்துவின் கவி வரிகள் தான் நினைவுக்கு வருகிறது வன்னி மண்ணின் இன்றைய நிலையை பார்க்கும் போது...
இம்முறை யாழ்ஓசையின் கழுகுப்பார்வை வன்னியின் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், மாத்தளன், பொக்கணை, வலைஞர் மடம் பகுதிகளை வட்டமிட்டுள்ளது.
இலங்கையின் வன்னிப் பகுதியில் நடைபெற்ற கொடிய யுத்தம், பெரும் மனிதப்படுகொலைகளையும் எண்ணற்ற சொத்து இழப்புக்களையும் தமிழர்களுக்கு ஏற்படுத்தி நிறைவு கண்ட இடங்கள் இவை. சுமார் நான்கு மாதங்கள் உலகில் வாழும் மனித இனம் கண்டிராத மிகக் கொடுமையான மனித வாழ்வையும் பொருளாதார நெருக்குதலையும் சந்தித்திருந்தனர் இப்பகுதிகளில்அப்போது சிக்கித்தவித்த 3 லட்சத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழ்மக்கள். நிராயுதபாணிகளான இவர்களை இயந்திர ஆயுதங்களும் இரசயனக் குண்டுகளும் எவ்வாறெல்லாம் பதம் பார்த்தன என்பதை அங்குள்ள தென்னைமரங்களும் கட்டிடங்களும் மண்ணும் சான்று பகரும். இயற்கை வளங்களையும் மக்களின் இருப்பிடங்களையும் துடைத்தழித்த பின்னர் சார்ந்த இடங்களில் மீள்குடியேயற்றம் என்ற விளம்பரத்துடன் மீண்டும் மக்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டுள்ளார்கள். வன்னி மக்கள் சார்ந்த இடங்களில் மீள்குடியமர்வு இது தான் சர்வதேசத்திற்குத் தெரிந்த முகவரி. இதற்குப் பின்னால் உள்ளவை, நடப்பை சர்வதேசம் அறிந்திராத சொல்லிலடங்காத சோக நிகழ்வுகள். இதனை யாழ்ஓசையின் கழுகு நேரில் சென்று பார்த்துள்ளது.


மீள்குடியமர்வு
கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நலன்புரி முகாம்களிலும், அடுத்தவர்களின் வீடுகளிலும் இன்னல்களையும், பொருளாதாரக் கஷ்டங்களையும் அனுபவித்து தங்களின் வாழ்நாட்களைக் கழித்த மக்கள் சொந்த நிலம் சென்று குடியிருந்தாலே போதும் என்ற எண்ணத்துடன் மீள்குடியமர வந்துள்ளனர். இவ்விடங்களிலிருந்து எவ்வாறு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டார்களோ அவ்வாறே மீண்டும் கொண்டுவந்து இறக்கிவிடப்பட்டுள்ளார்கள். இருப்பதற்கு வீடின்றி தமது காணிகளுக்குள்ளேளயே வளர்ந்து நிற்கும் பற்றைகளைத் துப்பரவு செய்துவிட்டு தறப்பாள்களால் கொட்டில்கள் அமைத்துக் குடியமர்ந்துள்ளார்கள்.
கிழக்கு மாகாணத் தேர்தலில் வெற்றிபெறுவதையே நோக்காக் கொண்டும் இலங்கையில் அண்மையில் வருகை தந்த பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தினரின் பார்வையிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் அவரே அவசரமாக இப்பகுதிகளில் மக்களை குடியமர்த்தியுள்ளமை கண்கூடான விடயம். இதனை அப்பட்டமாகவே இப்பகுதி மீள்குடியேற்றம் காட்டிநிற்கின்றது.

குடிநீர், மருத்துவ வசதியின்மை
மாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம் போன்ற இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் தண்ணீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவர்களின் காணிகளிலுள்ள கிணறுகள் மக்கள் விட்டுச்சென்ற உடமைகளாலும் இரும்புகளாலும் மூடப்பட்டுள்ளன. இதனால் அம்மக்கள் தமது அன்றாட தேவைக்கான தண்ணீரைக்கூட பெறமுடியாத நிலையில் உள்ளனர். இறுக அடைத்து மூடியிருக்கும் இப்பொருட்களை அகற்றி கிணற்றைச் சுத்தம் செய்வதற்கு இவர்களுக்கு நீண்ட நாட்கள் எடுக்கும். கிணறுகளைத் துப்பரவு செய்வதற்கு அரசினதும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் உதவிகளை இவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். குடிதண்ணீரைப் பெற்றுக்கொள்வதற்காக இங்குள்ள மக்கள் 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இரணைப்பாலை கிராமத்திற்குச் செல்கிறார்கள்.
இதே போல் இப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் மற்றுமொரு பாரிய பிரச்சினை மருத்துவ வசதியின்மை. போரின் பிடியிலிருந்து தமதுயிர்களை காத்துக்கொண்ட இம் மக்கள் தற்போது போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காமையால் அநாவசிய உயிரிழப்புக்களை சந்தித்து வருகின்றனர். அண்மையில் புதுக்குடிருப்பு 9ஆம் வட்டாரத்தில் சுவர் விழுந்து இளம் பெண் இறப்பும் ஆனந்தபுரம் 5 ஆம் வட்டாரத்தில் 12 வயதுப் பிள்ளை அரவம் தீண்டி உயிரிந்ததும் அருகில் போதிய வசதிகளுடன் மருத்துவமனை இல்லாமையே காரணமாகும். மிகப் பெரிய துன்பக்கடலைக் கடந்து மீண்டும் தமது சொந்த இருப்பிடங்களுக்கு வந்துள்ள இம் மக்களை விஷ ஜந்துகளும், அகால மரணங்களும் துரத்துவது கொடுமையே. அதிலும் இவற்றை உடன் தீர்ப்பதற்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லாமை கொடுமையிலும் கொடுமையே. போக்குவரத்து வசதியின்மையாலும் மக்கள் வீணான உயிர் இழப்புக்களை மீண்டும் மீண்டும் சந்தித்துவருகின்றனர்.
இவற்றுடன் மலசலகூட வசதியின்மையாலும் இம் மக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர். இதனால் எதிர்காலத்தில் இங்கு தொற்றுநோய்கள் பரவக்கூடிய அபாயமும் காணப்படுகிறது.

தற்காலிக வீட்டுத்திட்டம்
தமது சொந்தக் காணிகளுக்குள் கொட்டில் போட்டு குடியிருந்தால் தான் தற்காலிக வீட்டுத்திட்ட உதவி இவர்களுக்குக் கிடைக்கும் என அரச சார்பற்ற நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் ஆனந்தபுரம், மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களின் காணிகளுக்குள் கொட்டில் போட்டு குடியிருக்கின்றார்கள். வளவு முழுவதும் சூழ்ந்திருக்கும் பற்றைகளின் சிறுபகுதியை வெட்டி ஒதுக்கிவிட்டு அதனில் தறப்பாளால் கொட்டில் போட்டு குடியிருக்கின்றார்கள். சிலரின் கல் வீடுகள் சிறு தேசத்துக்குள்ளாகி ஓரளவேனும் குடியிருக்கக்கூடிய நிலையில் இருந்தாலும் கூட, நிறுவனங்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அதனருகே சிறுகுடிசை அமைத்து வாழ்ந்துவருகிறார்கள். இவ்வாறு போதிய பாதுகாப்பில்லாத அக்குடிசையினுள் படுத்துறங்குவதால் பாம்பு போன்ற விஷ ஜந்துகளின் தாக்குதல்களுக்குள்ளாகியும் வருகின்றனர். தன்னார்வ நிறுவனங்களின் தவறான விதிமுறைகளாலும் பாரபட்சமான கொடுப்பனவுகளாலுமே இம் மக்கள் மீண்டும் அவலமான பாதுகாப்பற்ற ஓர் வாழ்க்கையை வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். பானையிலிருந்து அடுப்பில் விழுந்த கதை போல் இவர்களின் தற்போதைய வாழ்க்கை உள்ளது.
மனிதன் வாழ்வதற்கான எந்தவித அடிப்படை வசதிகளும் பூர்த்திசெய்யப்படாத நிலையிலுள்ள இப்பகுதிகளில் அவசர அவசரமாக மக்களை குடியமர்த்தியுள்ளமையால் மீண்டும் இங்கு பெரும் அவலம் நிகழக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றது. இதனை தடுப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

போருக்குப் பின் மாத்தளன்
பல்லாயிரக்கணக்கான மனித உடலங்களை தன்னகத்தே புதைத்து வைத்துள்ளது மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம் மண். மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி வந்துள்ள இம் மக்கள் இப்பகுதியில் அதிகமாக தேடியது தாம் இறுதியாக இருந்துவிட்டுப் போன பங்கர்களைதான். கடற்கரை மணல் எங்கும் பொதுமக்கள் பாவித்த பாத்திரங்களின் சிதறல்கள். கால் வைக்கும் இடமெங்கும் பங்கர் குழிகள், மக்கள் பாவித்த சைக்கிள்கள், மோட்டர் சைக்கிள்கள், வாகனங்கள் என அனைத்துமே அந்தந்த இடங்களில் துருப்பிடித்த நிலையில் மலைபோல் குவிந்துள்ளன. மக்கள் இறுதியாக அவ்விடங்களை விட்டகலும் போது கைவிட்டு வந்த உடமைகள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன.
பூநகரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு முதலான இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து அனைத்து மக்களும் ஒதுங்கிக்கொண்ட இடம் இந்த மாத்தளன் கடற்கரைப் பகுதி. தமது சொத்துக்கள் அனைத்தையும் மக்கள் இறுதியாக விட்டுச் சென்ற இடம். விலைமதிக்க முடியாத கோடிக்கணக்கான தமிழர்களின் உடமைகள் இன்று அவர்களுக்கு எந்தவகையிலும் பிரியோசனப்படாமல் வீணே அழிந்து போயுள்ளன. இப்போது அவை தென்னிலங்கை வியாபாரிகளுக்கு இரும்பாக விலைபோகின்றன.
இவ்விடங்களிலேயே பேரிழப்புக்களை சந்தித்த மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் சென்றுள்ளனர். ஆனால் இவர்கள் நிறைவான சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வதற்கான எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. வெறுமனே காட்டில் விடப்பட்ட விலங்குகள் போல் விடப்பட்டுள்ளார்கள். அரசாங்கம் இவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். இல்லையேல் வன்னி மக்கள் மீண்டும் அவல வாழ்க்கையையே வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
அந்த மண்ணை வட்டமிட்டு திரும்புகையில் கழுகு முணுமுணுத்த பாடல் வரிகள், “மண்மேடாக் கிடக்கின்ற வீடுகளைப் பாரும்.” இது அந்நாளில் தமிழர்களின் குடியிருப்பு ஆகும்'

அஸ்வின்
நன்றி யாழ்ஓசை


 
---------------------------------------------------------------------------------------------------
 
---------------------------------------------------------------------------------------------------
 
 
 
 

© 2012 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved
Powered by Virakesari Online
Comments/Feedback: editor@yarlmann.lk
yarlmann Facebook yarlmann twitter yarlmann Video