ரேணுகா சின்னராசா,
முன்னாள் உதவி விரிவுரையாளர் (தொல்லியல்),
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.
தற்போது யாழ்ப்பாணத்தில் பண்பாட்டில் உள்ள பாவனைப்பொருட்கள் எல்லாம் பிற்காலத்தில் தற்செயலாகத் தோற்றியவையல்ல. பலவற்றுக்குத் தொன்மையான தொடர்ச்சியான வரலாறு உண்டு. ஆனால் அவை தொழிநுட்ப வளர்ச்சி, நாகரீக மாற்றம், பிற பண்பாட்டுச் செல்வாக்கு என்பவற்றுக்கு ஏற்ப பல மாற்றங்களைப் பெற்றுத் தற்காலத்தில் புதிய தோற்றத்துடன் காணப்படுகின்றன. அதற்கு உதாரணமாக யாழ்ப்பாணத்தில் பண்டைய கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் கிணறுகளைக் குறிப்பிடலாம்.
1971 ஆம் ஆண்டு பென்சில்வேனிய பல்கலைக்கழக அரும் பொருள் ஆய்வாளரான விமலா பேக்லே, கந்தரோடையில் மேற்கொண்ட அகழ்வாய்வின் மூலம் ஏறக்குறைய இற்றைக்கு 3000 ஆண்டில் இருந்து இங்கு மனித வரலாறு தொடங்கியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இக்குடியேற்றத்தை முதலில் ஏற்படுத்தியவர்கள் பெருங்கற்காலப் பண்பாட்டைப் பின்பற்றிய திராவிடர் என்பது அவரது கருத்தாகும். இவர்கள் பயன்படுத்திய பலவகைப்பட்ட மட்பாண்டங்கள், கைவினைப்பொருட்கள், கல் மணிகள் , இரும்புக் கருவிகள் சமகாலத் தமிழக பெருங்காலப் மக்கள் பயன்படுத்திய பொருட்களை ஒத்துக் காணப்பட்டதால் அங்கிருந்தே இம்மக்கள் முதலில் இங்கு வந்து குடியேறி இருக்க வேண்டும் என்பது தொல்லியலாளர்களின் பொதுவான கருத்தாகும். இம்மக்களே சம காலத்திலும் சற்றுப் பிற்பட்ட காலத்திலும் யாழ்ப்பாணத்தில் ஏனைய இடங்களிலும் குடியேறி இருந்தனர்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் புராதன குடியிருப்புகள் பற்றி ஆய்வு செய்த கலாநிதி இரகுபதி ஏறத்தாழ 40 இற்கு மேற்பட்ட இடங்களில் இரு பூர்வீகக் குடியிருப்புகள் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளார். இக்குடியிருப்புகள் பெரும்பாலும் கடற்கரையை அண்டிய மணற்பாங்கான இடங்களிலேயே முதலிற் ஏற்பட்டிருந்ததனைக் காணமுடிகிறது. இதற்கு அதிக தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தாது அழிக்கக் கூடிய பற்றைக்காடுகள், இலகுவாக நீர்ப்பெறக்கூடிய மண் தன்மை, கடல் உணவைப் பெறக்கூடிய ஆழம் குறைந்த பரவைக்கடல், கடல் - தரை வழிப்போக்குவரத்துக்குச் சாதனமாக தரைத்தோற்றம் என்பவற்றுக்கு இவ்விடங்கள் சாதகமாக இருந்தமை முக்கிய காரணிகள் ஆகும்.
இதனால் மணற்பாங்கான கடற்கரைப் பகுதியில் குடியிருப்புகளை ஏற்படுத்தி மக்கள் முதலில் அவ்விடங்களில் கிடைத்த மூல வளங்களுக்கு ஏற்பத் தமது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. அவற்றுள் அவர்களது நாளாந்த வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையாக இருந்த நீரைப் பெறுவதற்கு அவர்கள் கையாண்ட தொழிநுட்பம் இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக வைரமான மண்ணுள்ள இடங்களில் நீரைப்பெறுவதற்கு கூடிய தொழிநுட்பமும் அதிக மனித வலுவும் நீண்ட காலமும் தேவையானால் அவ்வாறான தொழிநுட்பம் அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் வளரவில்லை. தென்னிலங்கையில் இயற்கையாகத் தோன்றிய ஆறுகள், குளங்கள் நீர்போக்குவரத்துக்குச் சாதகமாக இருந்தமையால் மக்கள் அவ்விடங்களை அண்டிக் குடியிருப்புகளை ஏற்படுத்தினர். ஆனால் யாழ்ப்பாணத்தில் அந்தவாய்ப்புகள் இல்லை. அதனால்தான் சிறிய தொழிநுட்பத்துடன் இலகுவாக நீரைப் பெறக்கூடிய மணற்பாங்கான இடங்களில் குடியிருப்புகளை ஏற்படுத்தினர்.
அவ்வாறு குடியிருப்புகளை ஏற்படுத்திய மக்கள் தமக்கு வேண்டிய நீரைப் மணற்பாங்கான இடங்களில் சிறிய குழியை அல்லது கிணற்றை ஏற்படுத்தி இலகுவாகப் பெற்றுக் கொண்டனர். ஆயினும் அக்கிணறுகள் அல்லது குழிகள் காற்றாலும் மழையாலும் இலகுவாக மறைந்து போகும் தன்மையைக் கொண்டிருந்தன.
இதனால் அவற்றை அழியாது பாதுகாக்க புதிய தொழிநுட்பத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தது. அதன் விளைவே சுட்ட மண்ணைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட சுடு மண் கிணறுகள் தோன்றக் காரணமாயின. இதை யாழ்ப்பாணத்தின் பூர்வீக மக்கள் பயன்படுத்திய முதலாவது தொழிநுட்பங்களில் ஒன்று எனவும் எடுத்துக்கொள்ளலாம்.
ஆயினும் இது யாழ்ப்பாண மக்கள் கண்டுபிடித்த தொழில்நுட்பம் அன்று. இந்தியாவில் சிந்துவெளி நாகரிக காலம்தொட்டு இதன் பயன்பாடு இருந்துள்ளது. இலங்கைப் பிரதேசத்தில் கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் இது 2ஆவது நகர மயமாக்கத்துடன், அதிக அளவில் பயன்படுத்தியதற்கு ஆதாரம் உண்டு. தமிழகத்தில் அரிக்க மேட்டு பெருங்கற்கால மக்கள் சாயவேரைப் பதனிடவும், குடிநீரைப் பெறவும், கழிவு நீரைத் தேக்கி வைக்கவும் இவ்வகையான சுடுமண் கிணறுகளைப் பயன்படுத்தினார். இதன் பயன்பாடு ஆதிகாலத்தில் மட்டுமன்றி மிக அண்மைக்காலம் வரை தமிழகத்திலும் இலங்கையிலும் பயன்பாட்டில் இருந்ததற்குச் சான்றுகள் உண்டு. குறிப்பாகப் பெருநிலப்பரப்பில் ஒல்லாந்தர் ஆட்சியில் சாயவேர் பதனிடலுக்கும் நல்ல நீரைப் பெறுவதற்கும் இச்சுடுமண் கிணறுகள் அமைக்கப்பட்டன.
ஆயினும் 2004 ஆம் ஆண்டு வேலணையில் சாட்டி என்ற இடத்தில் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் யாழ். பல்கலைக்கழகத் தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட புராதன சுடுமண் கிணறு இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. கடற்கரையை அண்டிய இவ்விடம் முன்பு மணல்மேடுகளாக இருந்ததாக அவ்வூர் மக்கள் கூறுகின்றனர். ஆனால் நாம் ஆய்வு மேற்கொண்ட காலத்தில் அவ்விடம் கடலுடன் தொடர்புடைய சிறிய பள்ளமாகவே இருந்தது . இருப்பினும் முன்னொரு காலத்தில் இவ்விடங்களில் மக்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் மண்மேடுகள் சிறிய பற்றைக்காடுகளுடன் காணப்பட்டன. அவ்வாறான மேடு ஒன்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது ஏறத்தாழ 12 அடி ஆழத்தில் பண்டைய மக்கள் பயன்படுத்திய சுடுமண் கிணற்றைக் கண்டுபிடிக்க முடிந்தது.
இச்சுடுமண் கிணறு வட்ட வடிவில் சிறு சிறு துண்டுகளாகச் சுடப்பட்ட களிமண் தட்டுகளைக் கொண்டு வட்டவடிவில் கட்டப்பட்டிருந்தது. எமது ஆய்வின் போது 3 அடுக்குகளின் கட்டப்பட்ட சுடுமண் கிணற்றின் முழுப்பாகத்தையும் கண்டறிய முடியாத அளவுக்கு நீர் பெருக்கெடுத்து அதன் சுற்றுப்புறங்கள் நீரும் வீழ்ந்து மூழ்கியதால் அதன் எஞ்சிய பாகங்களைக் கண்டறிய முடியவில்லை. இதனால் கிடைத்த பாகங்களைக் கொண்டு சுடுமண் கிணறு எவ்வாறு இருந்ததென அடையாளம் காணமுடிந்தது.
சுடுமண் காணப்பட்ட இடத்தில் மேற்படையிலிருந்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட முத்திரை, நாணயம், ரோமர் கால மட்பாண்ட ஓடுகள், பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்ட ஓடுகள் கிடைத்திருப்பதால் இச்சுடுமண் கிணறு இற்றைக்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என கூறலாம்.
இவ்வகையான சுடுமண் கிணறுகள் சாட்டியில் மட்டுமன்றி வல்லிபுரம், பொன்னா வெளி போன்ற இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் இச்சுடுமண் கிணறுகளுக்குப் பதிலாகப் பெரிய மரங்களை வட்டமாக அறுத்து அதன் உட்பாகங்களைக் கோதியதன் பின்னர் அவற்றை மணற்பாங்கான இடங்களில் புதைத்து , கழிவுப்பொருட்கள் , மண் என்பன உள்ளே செல்லாதவாறு தடுத்து மக்கள் நீரைப்பெற்றனர். அவை கொட்டுக் கிணறுகள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. இவற்றின் பயன்பாடு இன்றும் சில இடங்களில் காணப்படுகின்றன. இதன் இன்னொரு கட்ட வளர்ச்சியே கல்லினாலும் பின்னர் சீமெந்தினாலும் கட்டப்பட்ட கிணறுகளாகும்.
நன்றி - கலைக்கேசரி