1952 ஆம் ஆண்டு கந்தையா குணரட்ணம் என்பவரால் மனோகரா திரை அரங்கு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மனோகரா திரை அரங்கு நூறு பேருக்கு சொந்தமானதாகும். பின் கந்தையா குணரட்ணத்திற்கு நீதிமன்றத்தால் 1975 இல் அரைப்பங்கு வழங்கப்பட்டு பின் முழுப்பங்கும் அவருக்கு மாற்றப்பட்டது.
இந்த வகையில் மனோகரா திரை அரங்கு ஆரம்பத்தில் நாடகம் போடும் புத்துவாட்டி மடுவமாகக் காணப்பட்டது. இந்தியாவில் இருந்து நடிகர்களும் கலைஞர்களும் வந்து நாடகங்களை நடத்தி இருந்தனர்.
எம்.ஆர். கோவிந்தசாமிப்பிள்ளை போன்றவர்களது தலை சிறந்த நாடகங்கள் நடத்தப்பட்டன.'கொட்டதகறுத்தார்' எனப்படும் செல்வம் என்பவர்தான் இவர்களை இந்தியாவில் இருந்து அழைத்து வந்து ஆரம்ப நாடகங்களை மனோகரா மேடையில் அரங்கேற்றினார்.
இதை இரசிப்பதற்கு சனக்கூட்டம் அலைமோதிய காலம் இருந்தது எனலாம். இவருக்குப் பின் புத்துவாட்டி சின்னத்தம்பி, புத்துவாட்டி இரத்தினம் போன்றவர்களால் இங்கு நாடகங்கள் நடத்தப்பட்டன.
இதன்பின் கே.சின்னத்தம்பி என்பவர் புத்துவாட்டி மடுவம் என்ற பெயர் வைத்து நாடகங்களை நடத்தினார். இதனை அடுத்து கே.சோமசுந்தரம் என்ற ஆர்மோனியக்கலைஞர் (நாடகங்களுக்கு ஆர்மோனியம் வாசிப்பவர்) 1945 வரையான காலப்பகுதி வரை இங்கு நாடகங்களை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
இவ் மடுவத்தின் வீழ்ச்சிக்கு சுவாரசியமான காரணமாக முன்னோர் கூறுவது என்னவெனில் ஒருமுறை கே.கோவிந்தசாமி நாடக நேரத்தில் மதுபோதையில் தூங்கிவிட்டாராம். அதனால் அவரை அடித்து எழுப்பினார்களாம். ஆத்திரமுற்று அவர் அறம் பாடிவிட்டார். இதனால் மடுவம் பின் சிறிது சிறிதாக இல்லாமல் போய்விட்டதாம். இதற்குள் ஓர் உள் அர்த்தம் என்னவெனில் கலைஞர்களை மதிக்க வேண்டும். அவர்கள் மனம் வேதனை அடைந்தால் நிலமை இப்படித்தான் என்பது அவர்கள் கருத்து.
இதன் பின்னர் 1950 களில் கே.குணரட்ணம் தலமையில் நூறு பேர் பங்கு கொண்டு அதுவரை இருந்த நாடக மடுவத்தினை மாற்றி மனோகரா என்ற பெயரில் ஆரம்பிக்கின்றனர். இவ்வாறு நாடக மடுவம் திரை அரங்காக மாற்றப்பட்ட போதும் மடுவத்தின் கட்டட மேடை அமைப்புகள் எதுவும் மாற்றப்படவில்லை.
இங்கு நாடகம் போடுவதற்கு ஏற்றதுபோல் இருபக்க படிகள் மேடையின் கீழ் நிலவறை பக்க படிகள் போன்ற அம்சங்களுடன் ஆரம்ப கால மனோகரா திரை அரங்கம் காணப்பட்டது. இதன் மேடையை அடுத்து கலறி, அடுத்து மரக் கதிரைகள், அதன் அடுத்து முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புகளுக்கு பஞ்சு (குசன்) ஆசனம் ஒழுங்கு முறையில் போடப்பட்டிருந்தது.
இங்கு பெல்கனியும் அமைக்கப்பட்டு அதில் வசதியான ஆசனங்கள் போடப்பட்டிருந்தது. இவ்வாறாக மனோகரா '20X40' அடி திரையில் 1960 களில் சிறப்பாக திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மனோகராவில் 1952 இல் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது.
இங்கு திரையிடப்பட்ட திரைப்படம் 'பிச்சைக்காரி'. இப்படம் எதற்காக திரையிடப்பட்டதென்றால் இங்கு மடுவத்தில் இறுதியாக கே.கோவிந்தசாமியின் பிச்சைக்காரன் நாடகம் காண்பிக்கப்பட்டது. அதனால்தான் திரையிடப்பட்ட பிச்சைக்காரி திரைப்படம் முதன் முதலில் திரையிடப்பட்டது என்பது உரிமையாளரின் கருத்து.
இதன் பின் மனோகரா சிறப்பாக இயங்கி அநேகரின் கவனத்தை ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்க விடயம். இவ்வாறு சிறப்பாக 1960 களில் இருந்து இயங்கிய மனோகராவிற்கு 1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாண திரையரங்குகளில் சிறந்த திரை அரங்கு என்னும் 'யு' தரச் சான்றிதழ் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் வழங்கப்பட்டதாகும்.
மனோகராவின் இயந்திர தொழில்நுட்பமானது ஆரம்பத்தில் இரண்டு இயந்திரங்கள் வைத்து இயக்கப்பட்டது. ஆரம்பத்தில் பல ரீல்கள் ஒரு ரீல் எட்டு அல்லது பத்து நிமிடங்கள் மாறி மாறி காண்பிக்கப்பட்டது. இது காபன்கட்டை எரித்து பெறப்படும் ஒளியில் இருந்து படம் திரையிடப்பட்டது.
இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் ஆரம்பத்தில் திரைப்படம் காண்பிக்கப்பட்ட இயந்திரத்தை வைத்தே இன்றும் திரையிடப்படுகிறது. மற்றைய திரை அரங்குகள் நவீன ஒளி விளக்குகளைக் கொண்டு இயங்கும். இயந்திரங்களை மாற்றியபோதும் மனோகரா அதே இயந்திரத்தை வைத்தே இன்றுவரை திரைப்படம் திரையிடப்படுகிறது.
இருப்பினும் தற்பொழுது நவீன ஒலி, ஒளி அமைப்பாக மாற்றப்பட்டு சிறப்பாக இயங்குகிறது. மேலும் இடைக்கால யுத்தத்தினால் 1990 களில் நிறுத்தப்பட்ட மனோகரா திரை அரங்கம் மீண்டும் 'இளையதளபதி' விஜய் நடித்த 'திருப்பாச்சி' திரைப்படத்துடன் 2005 இல் கோலாகலமாக மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கப்பட்டது.
இன்றுவரை யாழ் நகரில் இருக்கும் புதுத்திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகளில் ஒன்றாக குணரத்தினம் அவர்களின் மகன் கே.ஜெயந்திரன் அவர்களால் நடத்தப்பட்டு வருகின்றது.