இவர் ஏறக்குறைய நூற்றுப்பத்து வருடங்களுக்கு முன் சுன்னாகமென்னுமூரிலே வேளாளர் குலத்திலே அம்பலவாண சிங்க மாப்பாண முதலியார் கோத்திரத்திலே அம்பலவாணப் பிள்ளைக்குப் புதல்வராகப் பிறந்தவர்.
பிரசித்தி பெற்ற வைத்தியர் வல்லிபுரநாதருக்கு மாதுலர். வட்டுக்கோட்டையிலுள்ள சாஸ்திர கலாசாலையிற் கற்றவர். தமிழ், சமஸ்கிருதம் ஆங்கிலம், சிங்களம் என்னும் நான்கு பாஷையில் பாண்டித்தியம் உடையவர். முல்லைத்தீவு நியாயசாலையிலும் கற்பிட்டி நியாயசாலையிலும் துவிபாஷாவாதி (முதலியார்) என்னும் உத்தியோகத்திலிருந்தவர்.
ஆங்கில மொழி பெயர்ப்போடிருந்த மாணவ தரும சாத்திரம், பகவத்கீதை, மேகநூதம் முதலிய சமஸ்கிருத நூல்களைத் தமிழில் பெயர்த்துச் சங்கரபண்டிதர் படித்துக்கொள்ளக் கொடுத்தவர். இதோபதேஷம், சிசுபாலவதம் முதலிய சில காவியங்களையும் தமிழில் விளக்கிச் சுன்னாகம், அ.குமாரசுவாமிப்; புலவருக்குப் படிக்கக் கொடுத்தவர்.
அவருக்குச் சில சமஸ்கிருத நூல்களுக்குப் பாடஞ் சொன்னவர். சாந்தோக்கியம் முதலிய சில உபநிமிடங்களையும் சாங்கியத்தையும் மொழிபெயர்த்தவர்.
இவர் மொழி பெயர்த்த இதோபதேசத்தைச் சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர் அச்சிட்டுள்ளனர். 'இலங்காபிமானி' முதலிய சஞ்சிகைகளிலும் பல விஷயங்களெழுதினவர். கவிபாடுஞ் செயலுமுடையவர். இவர் செய்யுட்டிறத்தை உணரும் பொருட்டு ஒரு கருவியை இங்கே தருதும்:-
நீதி நெறிவிளக்க நேர்முறை யாராய்ந்து போதவுரை செய்யப் புலவோர்க்கு – மேதினியில் ஆமோ வயிரவ நாதரரு ளாசிரியன் தாமோ தரற்கன்றித் தான்.
இவர் பாடிய தனிக்கவிகள் சில 'உதயதாரகை'யில் வெளிவந்தன என்பர்.