ஆறுமுக நாவலர்

2012-04-25 16:05:11


  Share
 
 
 

இவர் யாழ்ப்பாணத்து நல்லூரிலே கார்காத்த வேளாள வருணத்திலே பாண்டி மழவர் குடியிலே ஞானப்பிரகாசசுவாமி மரபிலே சாலிவாகன சகாப்தம் கஎசரு க்குச் சமமான சித்திரபானு வருஷம் மார்கழி மாதம் ரு - ந் திகதி புதன் கிழமை இரவு சிங்க லக்கினத்திலே பிறந்தவர். 

இவர் தந்தையார் பெயர் கந்தப்பிள்ளை. தாயார் பெயர் சிவகாமி அம்மை. இவர் தொடக்கத்திலே நல்லூரிலிருந்த சுப்பிரமணியபிள்ளை என்பவரிடத்திலே தமிழ் நெடுங்கணக்குப் பயின்று பின் அவரிடத்தில் மூதுரை முதலிய நீதி நூல்களும் நிகண்டு முதலிய கருவி நூல்களும் கற்று வந்தனர். 

கற்றுவருங்காலத்தில் இவரது ஞாபக சக்தியையும் கல்வித் திறமையையுங் கண்ட இவருடைய தமையன்மார், இவரை அக்காலத்து வித்துவ சிரோண்மணியாய் விளங்கிய இருபாலைச் சேனாதிராய முதலியாரிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்கும்படி அனுப்பினார்கள். இவர் அவரிடம் சென்று இலக்கிய இலக்கணங்களை முறையாகக் கற்று வந்தனர். 

அவருக்குப் பின் அவர் மாணவர் நல்லூர் சரவணமுத்துப் புலவரிடம் கற்றனர். இவருடைய தமிழ்ப் புலமையைக் கண்டு மகிழ்ந்த தமையன்மார் இவருக்கு ஆங்கிலப் புலமையையும் அடைவிக்கும் படி கருதி இவரைப் 'பீற்றர் பார்சிவல்' என்னும் பாதிரியாருடைய ஆங்கில வித்தியாசாலைக்கு அனுப்பினார்கள். இவர் அங்கே போய் ஆங்கிலங் கற்று அதிலுஞ் சிறந்த புலமை அடைந்தனர். 

இவருடைய இரு பாஷைப் புலமையையுங் கண்ட பாதிரியார் இவரை அவ்வித்தியாசாலையிலே இருமொழியையுங் கற்பிப்பதற்குரிய ஓர் ஆசிரியராகினார். ஆசிரியராகிய இவரும் அங்கே பாதிரியார் விரும்பியவாறு இரு மொழிகளையும் கற்பித்து வந்தனர். வரும்போது இவர் ஆங்கிலத்திலுள்ள விஷயங்களை மொழிபெயர்த்துத் தமிழில் உரை நடையாக எழுதுவதில் வல்லவரென்பதையறிந்த பாரதியார் இவரை ஆங்கிலத்திலுள்ள 'பைபிளை'த் தமிழில் மொழிபெயர்த்துத் தரும்படி வேண்டினர். 

இவரும் அதற்கு உடன்பட்டு அதனை மொழிபெயர்த்து நன்றான செந்தமிழ் உரைநடையில் எழுதிக் கொடுத்தனர். இவர் பைபிளை மொழிபெயர்த்த காலத்திலே சென்னையிலும் சிலர் அதனை மொழிபெயர்த்தனர். அவற்றிலும் இவர் மொழிபெயர்ப்பே சிறந்ததென்று மதிக்கப்பட்டது. 

பாதிரியாரும் இவர் மொழிபெயர்ப்பையே அச்சிட்டு எங்கும் பரப்பினர். அக்காலந் தொடங்கி உரைநடை எழுதுவதில் இவருக்கு ஒப்பவர் இல்லை என்னும் பெயர் எங்கும் பரவலாயிற்று. இவர் பைபிளை மொழிபெயர்த்த காலத்தில் அதில் நன்கு பயின்றிருந்த உணர்ச்சியே பின்னர் இவர் கிறீஸ்துமத கண்டனஞ் செய்வதற்கும் எழுதுவதற்கும் உதவியாயிற்றுப்போலும். தமிழிலும் ஆங்கிலத்திலுமன்றி சமஸ்கிருதத்திலும் இவருக்கு அதிகம் பயிற்சி உண்டு. 

இவர் பீற்றர் பார்சிவல் பாதிரியாருடைய ஆங்கில வித்தியாசாலையிலே படிப்பித்து வருங்காலத்திலே தமிழ் மொழியையும் சைவ சமயத்தையும் வளர்க்க விரும்பிச் சில பிள்ளைகளைச் சேர்த்து அவர்களுக்குக் கருவி நூல்களையும் சமய நூல்களையும் பிற்பகலிலும் இரவிலும் கிரமமாகக் கற்பித்து வந்தனர். 

அப்போது இவரிடம் படித்தவர்கள் சதாசிவப்பிள்ளை, நடராசையர், விசுவநாதையர், சுவாமிநாதையர், ஆறுமுகப்பிள்ளை, கந்தசுவாமிப்பிள்ளை, ஆறுமுகச்செட்டியர் முதலாயினோர். இவர்களுள் சதாசிவப்பிள்ளை, நடராசையர், ஆறுமுகப்பிள்ளையென்பவர்கள் சிறந்த வித்வத்தன்மை அடைந்தவர்களாய் விளங்கினார். இவர்களுள் சதாசிவப்பிள்ளையே இவருடைய தருமங்களைப் பரிபாலித்து வந்தவர். 

இவர்களுக்குப் பின் இவரிடம் கற்றவர்கள் வித்துவ சிரோமணி ச.பொன்னம்பலபிள்ளையும், மா.வைத்தியலிங்கப்பிள்ளையும் முதலாயினோர். இவர்களுள் ச.பொன்னம்பலபிள்ளை இலங்கையிலும், இந்தியாவிலும் உள்ள அறிஞர்களால் மதிக்கப்பட்ட பிரபல வித்துவானாய் விளங்கினர். மற்றை வைத்தியலிங்கபிள்ளை என்பவர் இவரால் ஆரம்பிக்கப்பட்ட வண்ணார்பண்ணை வித்தியாசாலையிலே தலைமை உபாத்தியாயராய் நீண்டகாலமாக இருந்து படிப்பித்து வந்தனர். 

இவர்களுக்குப் பின் இவரிடம் கற்றவர்கள் தர்க்க குடாரதாலுதாரி வை.திருஞானசம்பந்தபிள்ளையும், சிதம்பரத்திலுள்ள இவருடைய சைவப்பிரகாச வித்தியாசாலையிலே உபாத்தியாயராயிருந்த ச.பொன்னம்பலபிள்ளையும், வை.விசுவநாதப்பிள்ளையும், வண்ணார்பண்ணையிலுள்ள இவருடைய சைவப்பிரகாச வித்தியாசாலைக்கதிபராயிருந்து தேகவியோகமடைந்த த.கைலாசபிள்ளையும் முதலாயினோர் இவர்களும் இவரிடம் படித்துச் சிறந்த வித்துவான்களாயினர். 

இவர் கற்பிக்கத் தொடங்கிய காலத்திலேயே பாதிரிமாருடைய முயற்சியினாலே யாழ்ப்பாணத்திலே கிறீஸ்து மதம் வளர்ச்சி அடைவதையும் சைவமதம் குன்றுவதையும் கண்டு பொறாதவராய் சைவ மதத்தை விருத்தி செய்ய விரும்பிச் சைவ சாஸ்திரங்களைத் தேடிக் கற்றுச் சைவப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். 

இவர் முதலிற் பிரசங்கஞ் செய்யத்தொடங்கியது வண்ணார் பண்ணைச் சிவன்கோயில் வசந்த மண்டபத்திலேயாகும். அங்கே பிரசங்கஞ் செய்து வருவதற்கு நல்லூர் வேங்கடாசல ஐயர் குமாரர் கார்த்திகேச ஐயரையும் ஒருவராக நியமித்துத் தாமொருமுறையும் அவரொருமுறையுமாகப் பிரசங்கஞ் செய்து வந்தனர். இவர் பிரசங்கத்தைக் கேட்க விரும்பி யாழ்ப்பாணத்திலுள்ள பற்பல ஊர்களினின்றும் அறிஞர்கள் வருவார்கள். அவர்களுள் சிலர் இவரை அழைத்துக்கொண்டுபோய் தம்மூர்களிலும் சைவ மத விருத்தியின் பொருட்டுப் பிரசங்கஞ் செய்வித்தார்கள். அப்பிரசங்கங்களாலும் வண்ணார்பண்ணையிற் செய்துவந்த பிரசாரங்களாலும் சைவமதம் மேலோங்கி வளர்வதாயிற்று. 

அதனால் இவர் புகழும் எங்கும் பரவலாயிற்று. கிறீஸ்து மதப் பிரவேசஞ் செய்ய விரும்பிய அநேகர் இவர் பிரசங்களைக் கேட்டு அதனை ஒழித்தனரென்றால் இவர் பிரசங்க வன்மையும் நன்மையும் எத்துணையென்பதை நாம் சொல்லவும் வேண்டுமா? யாழ்ப்பாணத்திலே பாதிரிமாரால் சைவத்துக்கு நேர்ந்த கேடுகள் பலவற்றையும் நீக்கிச் சைவத்தை யாழ்ப்பாணத்திலே நிலைபெறச் செய்தவர் இவரென்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். 

இவர் பிறந்திலரேல் யாழ்ப்பாணம் முழுவதும் கிறீஸ்து மதமே பரவுமென்பது நிச்சயம். இவர் தமது பிரசங்கத்தால் சைவ சமயத்தை விருத்தி செய்துவரும்போது தமிழ்க் கல்வியையும் விருத்திசெய்ய விரும்பி வண்ணார்பண்ணையிலே சைவப்பிரகாச வித்தியாசாலை என்னும் பெயரோடு ஒரு வித்தியாசாலையைத் தாபித்துத் தாமும் அதில் ஓர் ஆசிரியராகவிருந்து இலக்கிய இலக்கணங்களையும் சமய நூல்களையும் கற்பித்து வந்தனர். 

அக்காலத்து இவரிடம் படித்தவர்கள் மேற்காட்டியவர்களுள்:- திருஞானசம்பந்தபிள்ளை, கைலாசபிள்ளை முதலாயினோராவர். இவ்வித்தியாசாலையைத் தாபித்த பின்பு சிதம்பரத்திலும் ஓர் வித்தியாசாலையைத் தாபித்தனர். இவ்விரண்டும் இப்போதும் நன்கு நடைபெற்று வருகின்றன. 

வண்ணார்பண்ணையிலே வித்தியாசாலையைத் தாபித்த பின்னர் தம்மால் புதிதாக இயற்றப்படுவனவும் திருத்தப்படுவனவுமாகிய புஸ்தகங்களையும் தம்மால் எழுதப்படும் துண்டுப் பத்திரிகைகளையும் அச்சிட்டு வெளிப்படுத்தும் படி ஓர் அச்சியந்திரசாலையையும் தாபித்தனர். அவ் அச்சியந்திரம் தமது வேலைக்குப் போதாமையினாலே சிலவாண்டுகளின் பின் அதனை விற்றுவிட்டுச் சென்னையிலே இப்போதும் நடந்து வருகின்ற அச்சியந்திரசாலையைத் தாபித்தனர். 

இவரால் புதிதாக இயற்றப்பட்ட நூல்களாவன:

முதற் பாலபாடம், இரண்டாம் பாலபாடம், நான்காம் பாலபாடம், முதற் சைவ வினாவிடை, இலக்கண வினாவிடை, இலக்கணச் சுருக்கம், பெரியபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம், சிதம்பர மான்மியம், கோயிற்புராணவுரை, சைவசமய நெறியுரை, நன்னூற் காண்டிகையுரை முதலாயின. 

இவரால் திருத்தப்பட்ட நூல்களாவன:

கந்தபுராணம், பெரியபுராணம், சேதுபுராணம், திருக்குறள் பரிமேலழகருரை, திருக்கோவையுரை, தொல்காப்பியம் சேனாவரையருரை, இலக்கணக் கொத்து, தொல்காப்பியச் சூத்திர விருத்தி, பிரயோகவிவேகம், தருக்கசங்கிரகவுரை, நன்னூல் விருத்தியுரை முதலாயின. இன்னும் கிறிஸ்து மத கண்டனங்களும் பிறவும் இவரால் எழுதப்பட்டுள்ளன. 

இவற்றுள் திருக்குறள் பரிமேலழகருரை, திருச்சிற்றம்பலக்கோவையுரை, தருக்கசங்கிரகவுரை முதலாயின இராமநாதபுரம் ஸ்ரீமாந், பொன்னுசாமித் தேவரவர்கள் விரும்பியவாறு அவர் உதவிய பொருள் கொண்டு இவராற் பதிப்பிக்கப்பட்டன. இந்நூல்களுக்கு இவர் நண்பராய் விளங்கிய திருவாவடுதுறை ஆதீனத்து மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் பிறரும் சிறப்புக் கவிகள் அளித்துள்ளார்கள். 

அக்கவிகளுள் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் இவரைப் புகழ்ந்து மிகப்பாராட்டிக் கூறிய சில கவிகளை இங்கே காட்டுதும்:-

''மன்னுபெருந் தமிழ்ப்பாடை யிலக்கணமு மிலக்கியமும்
வரம்பு கண்டோன்
பன்னுசிவ புராணங்கள் பலதெரிந்தோன் சிவாகமநூற்
பரவை மூழ்கி 
உன்னுமனு பூதியெனும் விலைவரம்பி லாமணிகை 
யுறக்கொண் டுள்ளான் 
இன்னுநய குணத்தினனாய் சைவமெனும் பயிர்வளர்க்கு 
மெழிலி போல்வான்"

"நீடுபுகழ்த் திருக்கேதீச் சரத்திருக்கோ ணாசலமிந் 
நிலா நின்ற 
நாடுபுகழ்த் தலம்பொலியாழ்ப் பாணத்து நல்லூர்வாழ் 
நகராக் கொண்டோன் 
தேடுபுக ழுருவமைந்த கந்தவே டவத்துதித்த 
செல்வன் யாரும்
பாடுபுக ழாறுமுக நாவலனவ் வாறச்சிற்
பதிப்பித் தானே"

இவராற் பரிசோதிக்கப்பட்ட சேனாவரையருரை சி.வை.தாமோதரம்பிள்ளையவர்களால் பதிப்பிக்கப்பட்டது. இலக்கணக் கொத்து, தொல்காப்பியச் சூத்திர விருத்தி முதலாயின அக்காலத்துத் திருவாவடுதுறை யாதீனத்துச் சந்திதானமாயிருந்த ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் விரும்பியவாறு இவராற் பதிப்பிக்கட்டன. பெரும்பாலும் பிழையின்றிப் புத்தகங்களை அச்சிடுவதில் இவர்க்கு நிகராவார் பிறரிலர். 

இவர் யாழ்ப்பாணத்திலன்றி இந்தியாவிலும் ஆங்காங்குள்ள ஆலயங்களிலும் ஆதீனங்களிலும் பற்பல பிரசங்கள் செய்துள்ளார். அங்கும் அவர் பிரசங்கத்தைப் புகழாதாரிலர். இவர் திருவாவடுதுறை ஆதீனத்திலே பிரசங்கஞ் செய்தபோது அங்கு அதனைக் கேட்டு மகிழ்ந்த ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிகர், ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரென்னும் உபய சந்நிதானங்களாலும் மற்றை வித்துவான்களாலுமே 'நாவலர்' என்னும் சிறப்புப் பெயர் இவருக்கு அளிக்கப்பட்டதென்றால் இவர் பிரசங்கத்தின் அருமை பெருமைகள் இத்துணைய என எம்மால் அளவிட முடியுமா? 

இராமநாதபுரம் பொன்னுச்சாமிதேவரவர்களும் இவரை விரும்பி அழைத்துத் தமது சபையிலே பிரசங்கஞ் செய்வித்து அதனைக் கேட்டு மகிழ்ந்து இவருக்குப் பல விருதுகள் அளித்தனர். இத் தகைமை வாய்ந்த நாவலரவர்கள் இவ்வுலக வாழ்வை ஒருவினர். 

வாக்கிய நடை எழுதுவதில் இவருக்குச் சமமானவரில்லை. தமிழ் வாக்கியங்களுக்குக் குறியீடுகள் இட்டு எழுதத் தொடங்கியவரும் இவரென்றே சொல்லலாம். செய்யுள் நூல்களை இவரியற்றாவிட்டாலும் செய்யுளியற்றுவதிலும் இவர் மிகு சாமர்த்திய முடையவர். அதனை யுணரும் பொருட்டு இவரியற்றிய செய்யுளொன்றையீண்டுத் தருதும்: 

சீர்பூத்த கருவிநூ லுணர்ச்சி தேங்கச் 
சிவம்பூத்த நிகமாக மங்க ளோங்கப் 
பார்பூத்த புறச்சமய விருள்கணீங்கப்
பரம்பூத்த சைவநிலை பாரோர் தாங்கப் 
பேர்பூத்த சிவானந்தத் தினிது தூங்கப்
பிறைபூத்த சடைமௌலிப் பிரானர் தந்த
வார்பூத்த வறிலிச்சை தொழிலென் றேதும் 
மதம்பூத விநாயகன்றாள் வணங்கி வாழ்வாம். 

இவருடைய விரிந்த சரிதத்தை நல்லூர் ஸ்ரீமாந்.த.கைலாசபிள்ளை அவர்கள் எழுதிய 'ஆறுமுகநாவலர் சரித்திரம்' என்னும் நூலாலும், அருணாசலக் கவிராயர் பாடிய 'ஆறுமுகநாவலர் புராணத்தாலும்' அறிந்து கொள்க.


 
---------------------------------------------------------------------------------------------------
 
---------------------------------------------------------------------------------------------------
 
 
 
 

© 2012 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved
Powered by Virakesari Online
Comments/Feedback: editor@yarlmann.lk
yarlmann Facebook yarlmann twitter yarlmann Video