யாழ்ப்பாணத்து மாம்பழமும் பலாப்பழமும் சொல்லும் கதை என்ன?

2012-04-27 10:56:13


  Share
 
 
 

மா, பலா, வாழை ஆகிய கனிகள் முக்கனிகள் என்று சிறப்பாக அழைக்கப்படுகின்றன. இம்முக்கனிகளில் ஒன்றான பலா தமிழர் வாழ்வில் மிகப் பழைமையான காலத்தில் இருந்து தொடர்புபடுத்தப்பட்டு வருகிறது. அதிலும் யாழ்ப்பாண மக்களுடைய உணவுப் பழக்க வழக்கத்துடன் மா மற்றும் பலாவுக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

யாழ்ப்பாணத்தில் உள்ள தென்மராட்சிப் பிரதேசம் மா மற்றும் பலா வகைகளுக்கு பெயர் போனது. அதிலும் மீசாலை மாம்பழம் அதிக சுவையானது. மீசாலை, கொடிகாமம் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் அதிகளவான மா மற்றும் பலா ஆகியன விளைவதோடு, அவை மிகுந்த சுவை நிறைந்தும் காணப்படுகின்றன.

முன்னர் புகையிரத வசதி இருந்த காலத்தில் அங்கிருந்து ரெயின் மூலம் பலாப்பழம், மாம்பழம் முதலியன நாட்டின் ஏனைய இடங்களுக்கு அனுப்பப்படும். அக்காலத்தில் தொலைபேசி வசதி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருந்தது. ஆகவே பார்சல் அனுப்புவர் "ரெயினில் பார்சல் வருகிறது. அதைப் பெற்றுக் கொள்ளவும்." என்று தந்தி அடிப்பார். இவ்வாறான சுவாரிசியமான சமபவங்கள் நிறையவே உண்டு.

யாழ்ப்பாணத்தில் பொதுவாக மே மாதம் தொடங்கும்போது பழ சீசன் தொடங்கும். சீசன் தொடங்கும் காலத்தில் பழங்களின் விலை சற்று ஏற்றமாகவே இருக்கும். முன்னர் சாவகச்சேரி சந்தையே தென்மராட்சியின் முக்கிய சந்தையாக விளங்கியது. தேங்காய் வாங்குபவர்கள், விற்பவர்கள் மாத்திரம் கொடிகாம சந்தையை நாடுவது வழக்கம். அதன்பின் நாட்டில் நிலவிய அசாதாரண நிலைமை காரணமாக சாவகச்சேரி சந்தையின் முக்கியத்துவம் சரியத் தொடங்கியமை வேறு கதை. தற்போது சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் சந்தைகள் மெல்ல மெல்ல முக்கியத்துவம் பெறத் தொடங்குகின்றன. 

நகரில் இருந்து வர்த்தகர்கள் சாவகச்சேரிக்குப் படையெடுத்து வருவார்கள். அதிகாலையில் வியாபாரம் சூடு பிடிக்கும். அக்காலத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய நாட்களில் சந்தை கூடுவது வழக்கம். கத்தரிக்காய், மாம்பழம், தேங்காய், பலாப்பழம் முதலிய பொருட்களை மலிவாக வாங்கி நகரச் சந்தைகளில் விற்பது அவர்களின் வழமை ஆகும். காரணம் நல்ல சுவையான பழங்களுக்கு நகரில் நல்ல கேள்வி இருக்கும். சீசன் சூடு பிடிக்கும் காலத்தில் பழங்களின் விலையும் படிப்படியாகக் குறைவடையும். சில காலங்களில் பலாப்பழம் ஒன்றை பத்து, இருபது ரூபாவுக்குக் கூட வாங்க முடியும். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நீடிக்கும் சீசன் குறைவடைய ஆரம்பிக்கும். அவ்வேளை மறுபடியும் விலை அதிகரிக்கும். இதுதான் வழமையாக நடக்கும் நிகழ்ச்சி ஆகும்.

ஆனால் நாட்டு நிலைமை சீரடைந்து, போக்குவரத்து வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாக வழமைக்குத் திரும்பிய காரணத்தால் தென்னிலங்கை வர்த்தகர்களும், நாட்டின் ஏனைய பிரதேச வர்த்தகர்களும் யாழ்ப்பாணத்துக்கு பலதரப்பட்ட பொருள் கொள்வனவுக்காகப் படையெடுக்கத் தொடங்கனார்கள். இதனால் மிக அண்மைக் கால பழங்களின் சீசன் காலத்தில் உற்பத்தியாளர்கள் நல்ல பயனைப் பெற்றார்கள். அதேவேளை உள்ளூர் கொள்வனவாளர்களுக்கு சந்தையில் பொருட்கள் தாராளமாகக் கிடைக்கவில்லை.



தற்போது குடாநாட்டின் பல பாகங்களிலும் காய்கள் (மா, பலா) நன்றாக முற்றத் தொடங்குகின்றன. முன்னர் காய்களை நன்றாக முற்றியவுடன் ஆய்ந்து, அவற்றைப் புகைப் போட்டுப் பழுக்க வைத்து சந்தைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். சந்தையில் உள்ள கேள்வியைப் பொறுத்து விலை அமையும். பொதுவாக பண்டமாற்று முறையே வழக்கில் இருந்தது. பொருளை எடுத்துச் செல்பவர் சந்தையில் விற்பனையில் ஈடுபடும் ஒருவருடன் (பொதுவாக பெண்களே சந்தையில் பொருட்களை வாங்கி விற்பார்கள்.) குறிப்பிட்ட ஒரு விலைக்கு உடன்பட்டு தனது பொருளை அவருக்கு விற்பனை செய்யும் அதேவேளை அவரிடம் இருந்து தனக்குத் தேவையான பொருளை வாங்குவார். கூடிக் குறையும் தொகையை பணமாக (இருசாராரும்) வழங்குவது வழமை ஆகும். 

ஆனால் தற்காலத்தில் அவ்வாறான நிலைமையை காண முடியவில்லை. தற்போது வித்தியாசமான, மிகவும் நுட்பமான, இருசாராருக்கும் இலகுவான ஒரு வியாபார முறை அங்கு மெல்ல மெல்ல ஊடுருவி வருகிறது. வியாபாரிகள் பெருந்தெருக்கள், சிறுதெருக்கள், ஒழுங்கைகள் என ஒரு ரவுண்ட் வருவார்கள். அவ்வாறு வரும்போது எங்கெல்லாம் மரங்களில் காய்கள் தொங்குகின்றன எனக் கணக்கெடுப்பார்கள். பின்னர் ஒவ்வொரு வீடாகச் சென்று மரத்தில் வைத்தே காய்களுக்கு விலை பேசுவார்கள். ''கிட்டத்தட்ட இத்தனை காய்கள் வரும். இதனால் இவ்வளவு ரூபா தருகிறோம்.'' என பேரம் பேசுகிறார்கள். ஆரம்பத்தில் குறைவான விலையே முன்வைக்கப்பட்டாலும், விற்பவர் சற்று பின்னடித்தால் விலை சற்றுக் கூடும் வாய்ப்பு உண்டு. தற்போது ஒரு மரத்தின் சராசரி விலை 1500 ரூபா முதல் 2000 ரூபா வரை போகிறது. காய்களின் எண்ணிக்கையிலேயே விலை தங்கியுள்ளது.



இவ்வாறான நடைமுறையால் வாங்குபவர், விற்பவர் என இரு சாராரும் நன்மை பெறுவதாக இரு தரப்பினரும் கூறுகிறார்கள். விற்பவரைப் பொறுத்த வரையில், மரத்தில் இருந்து காய்களை ஆய்ந்து, காய வைத்து, புகைப் போட்டு, சந்தைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லை. இதேபோல் வாங்குபவர் காய்களை மொத்தமாக வாங்குவதால் அவற்றை தானே ஆய்ந்து, காயவைத்து, புகைப் போடாமல் (மருந்து அடித்து), வாகனக்களில் ஏற்றி மொத்தமாக விற்பனை செய்வதால் அதிக இலாபம் பெற முடியும். சில இடங்களில் முற்றாத காய்களை சில நாட்கள் கழித்து ஆய முடியும். ஒரு பகுதியில் 5 - 6 வீடுகளில் காய்களை வாங்குவதால் ஒரே வாகனத்தையும், கூலியாட்களையும் பயன்படுத்த முடியும். இதனால் செலவு குறையும். அதேவேளை விற்பவருக்கோ எவ்விதமான வேலையும் இல்லாமல் கையில் காசு கிடைக்கிறது. முன்னர் வீட்டின் இளையோர் சந்தைக்குச் சென்று பொருட்களை விற்று வாங்குவார்கள். ஆனால் இப்போது அவர்கள் அதை மரியாதைக் குறைவான நடவடிக்கையாக எண்ணுகிறார்கள். "அப்பா! வெளிநாட்டில் இருந்து காசு வருகிறது. இதெல்லாம் இப்போ மரியாதை இல்லை.'' என கூறுகிறார்கள். 

இதனால் என்னவோ உள்ளூர் கொள்வனவாளர்களின் நிலைமை திண்டாட்டமாகப் போகிறது. மரத்துடன் விலை பேசி காய்களைக் கொடுப்பதால் வாங்குபவர் விரும்பினால் சில காய்களை விற்பவருக்குக் கொடுக்கலாம். முன்னர் வீடுகளுக்கு வரும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தாராளமாகப் பழங்களைக் கொடுத்து மகிழ்வார்கள் யாழ்ப்பாணத்தவர்கள். இதற்காகவே மாமரம், பலாமரம் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு அடித்துப் பிடித்துச் செல்வது வேறுகதை. தற்போது போகும் நிலைமைப் பார்த்தால் வீட்டில் உள்ளவர்களுக்கே பழமில்லை. இதில் வருபவர்கள் நிலைமை? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

அம்மு

 

 


 
---------------------------------------------------------------------------------------------------
 
---------------------------------------------------------------------------------------------------
 
 
 
 

© 2012 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved
Powered by Virakesari Online
Comments/Feedback: editor@yarlmann.lk
yarlmann Facebook yarlmann twitter yarlmann Video