தாமோதரம்பிள்ளை

2012-05-29 14:31:37


  Share
 
 
 

இவர் யாழ்ப்பாணத்திலே புத்தூரைச் சார்ந்த சிறுப்பிட்டி என்னும் சிற்றூரிலே வேளாண் குலத்திலே சாலிவாகன சகாப்தம் 1755 க்கு சமமான நந்தனளு ஆவணி மாசம் பிறந்தவர். இவர் தந்தையார் வயிரவநாதப்பிள்ளை என்பவர். தாயார் பெருந்தேவி அம்மையார். இவர் தமது தந்தையாரிடம் ஆத்திசூடி, வாக்குண்டாம் முதலிய நீதி நூல்களையும் சூடாமணி, நிகண்டு முதலியவற்றையும் கற்றுணர்ந்தபின் சுன்னாகத்திலிருந்த முத்துக்குமாரக் கவிராயரிடம் சென்று இலக்கிய இலக்கணங்களையும் கற்றுணர்ந்தவர்.

தெல்லிப்பழையில் அமெரிக்கமிஷனால் தாபிக்கப்பட்ட ஆங்கிலக் கலாசாலையிலே ஆங்கிலம் சில ஆண்டுகள் கற்றபின் வட்டுக்கோட்டையிலே அம் மிஷனால் ஸ்தாபிக்கப்பட்ட சர்வசாஸ்திர கலாசாலையிலும் எட்டாண்டுகள் வரையிற் கற்றவர். கோப்பாயில் இருந்த போதனா வைத்தியசாலையில் சில காலம் ஆசிரியராக இருந்து பின்பு சென்னையில் பார்சிவல் துரையால் நடாத்தப்பட்ட ~தினவர்த்தமானி|ப் பத்திரிகைக்கு அதிபராய் அங்கு சென்று சிலகாலம் அதனை நடத்தியவர். சென்னை சர்வகலாசாலையிலே பீ.ஏ. பரீட்சையிற் சித்தி எய்தியபின் கள்ளிக்கோட்டையிலுள்ள இராசாங்க வித்தியாசாலையிலே ஆசிரியராக இருந்தவர். சென்னை அரசாட்யாரால் அளிக்கப்பட்ட 'ராவ்பகதூர்' என்னும் சிறப்புப் பெயரும் பெற்றவர். புதுக்கோட்டையில் பெருமன்றத்து நீதிபதி உத்தியேகமும் வகித்து நடாத்தியவர். சென்னைப் பல்கலைக்கழகப் பரீட்சகராகவுமிருந்தார். 

இவர் உயர்ந்த உத்தியோகத்தங்களில் அமர்ந்தனராயினும் தமிழ் நூற் பயிற்சியையும் விடாது அரிய தமிழ் நூல்களையெல்லாம் தேடிக் கற்று வந்தவர். சொல்லரித்தும் இராமபாணந் தின்றும் எழுத்துக்களின் உருத்தெரியாது கிடந்த எட்டுப் பிரதிகளில் உள்ள நூல்களுட் சிலவற்றை மிக அரிதாக ஆராய்ந்து அச்சிட்டு தமிழ் நாட்டார்க்கு உதவி மகிழச் செய்தவர். தாமும் புதிதாகச் சில நூல்கள் இயற்றினவர். சிறப்புக்கவியும் துதி கவியும் சீட்டுக் கவியும் பிற கவியுமாகத் தனிநிலைக் கவிகள் பல பாடினவர்.

இவர் பரிசோதித்து அச்சிட்ட தமிழ் நூல்களாவன: தொல்காப்பியம், எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியருரை, ஐந்தியல் நச்சினார்க்கினியருரையும் ஏனைய பேராசிரியருரையுமாயுள்ள பொருளதிகாரவுரை, இறையனாராகப்பொருளுரை, இலக்கண விளக்கவுரை, வீரசோழியவுரை முதலிய இலக்கண நூல்களும், சூளாமணி, தணிகைப் புராணம் முதலிய இலக்கிய நூல்களுமாம். ஆறுமுகநாவலரால் பரிசோதிக்கப்பட்ட தொல்காப்பியத்துச் சொல்லதிகாரம் சேனாவரையருரையும் இவராலேயே பதிக்கப்பட்டது. இவர் இயற்றிய நூல்கள் சைவ மகத்துவம், கட்டளைக் கலித்துறை, சூளாமணி வசனம் முதலியனவாகும். 

இவருடைய பாடுந் திறமையை உணர்தற்பொருட்டு இவர் பாடிய சில கவிகளை ஈண்டுக் காட்டுதும்.

வீரசோழியப் பதிப்புரை
ஆசிரிய வணக்கம்
எழுத்தொடு விழுத்தமிழ் பழுத்தசெந் நாலினன் 
முழுத்தகை யேற்கவை யழுத்தியோன் சுன்னா
கத்துயர் மரபினோன் முத்துக்கு மார
வித்தக னடிதலை வைத்துவாழ்த் துவதே.

சைவ மகத்துவம்
பூவின் மெய்ம்மத மிதுவிது பொய்யெனப் புகலுவ தரிதேயோ
நாவி னான்மனத் தானவின் றுணர்வரு ஞானசாகர மாமெய்த்
தேவ வாசகம் யுத்தியிற் கதீதமாந் திறம்புமோ மனுவாலே 
மேவு மெவ்வௌவேதமுத் திறம்புநல் விஞ்சையா லளப்பின்னே.

சுப்பிரமணிய தேசிகர்
விண்ணாடு கைலை வழித்தே சிகர்வௌ; வினைக்குநெற்றிக் 
கண்ணான சுப்பிர மணிய சுவாமிகள் கான்மலரை 
நண்ணாத் தலையி னசைதீரத் தாங்கநற் கோகழிவாய் 
மண்ணாய்ப் பிறந்தில னேயைய கோவிந்த வையகத்தே. 

அம்பலவாண பண்டிதர்
வாக்கிற் சரச்வதி வாய்மைக் கரிச்சத்ர மன்னனெடுந்
தூக்கு நடுவு நிலைமையிற் சானவி தூமையிற்பொன்
ஆக்கந் தனிலள காபதி மார னழகிலிந்த்ரன்
தேக்கும்வை போகத்தி லம்பல வாணனைச் செப்பிடினே.

புத்திர சோகம்
விந்தை மிகுந்த வியன்சோம சுந்தர மென்கொழந்தைச் 
சந்திர சூரியர் வந்துதி யாமுன் சகோதரர்தாய்
தந்தைய ரின்றித் தனிநின்ற வேளையிற் றாலினையோ 
நிந்தனை நிந்தனை காணந்த காவிது நின்றனக்கே.ள 

இவர் தமிழ் மொழியை வளர்க்குமாறு புத்தகங்களை அச்சிட்டமையேயன்றி ஏழாலை என்னும் ஊரிலே ஒரு தமிழ் வித்தியாசாலையையும் தாபித்தார். அவ் வித்தியாசாலை ஆசிரியராக இருந்தவர்கள் முருகேச பண்டித குமாரசுவாமிப்புலவருமே. அதிற் கற்றுச் சிறந்த வித்துவான் சிவானந்த ஐயர் முதலாயினோர்.

 


 
---------------------------------------------------------------------------------------------------
 
---------------------------------------------------------------------------------------------------
 
 
 
 

© 2012 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved
Powered by Virakesari Online
Comments/Feedback: editor@yarlmann.lk
yarlmann Facebook yarlmann twitter yarlmann Video