|
லண்டன் லூசியம் (Lewisham) சிவன் ஆலயத்தில் 'தெய்வத் தமிழ்' என்னும் பொருளில் மு.க. மாசிலாமணி அவர்கள் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இங்கு தரப்படுகின்றன.
மிகத் தொன்மையும் இலக்கிய, இலக்கண வளச் செழுமையும் நீண்ட தொடர்ச்சியான வரலாற்றுச் சிறப்பு கொண்டதும் இன்றும் வழக்கிலுள்ளதுமான ஒரு சில உலக செம்மொழிகளில் (Classical Language) தமிழும் ஒன்று. தமிழ் மொழிக்கெனத் தனிச் சிறப்புகள் பலவுண்டு.
உலகின் ஒப்பரிய சமயங்களான சமணம், பௌத்தம், சைவம், வைணவம், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற பல சமயங்கள் தத்தம் சமயக் கொள்கைகள், கோட்பாடுகளை விளக்கும் அருமையான பல இலக்கியங்களை இயற்றிப் பெருமை கொள்வதற்கு இடம் அளித்த மொழி தமிழே.
தமிழிலக்கியம் என்ற பெருஞ் சுரங்கத்தில் சமயச் சார்பில்லாத செந்தமிழ் ஆக்கங்களே இல்லை என்று கூறுமளவிற்கு பெரும்பாலும் சமயம் சார்ந்த நூல்களே காணப்படுகின்றன. ஒவ்வொரு சமயத்தாரும் உருகி உருகிப் பாடி தமிழ் மொழியை பக்திக்கும் உருக்கத்திற்கும் உரிய ஒரு தெய்வீக மொழியாகச் சிறப்படையச் செய்துள்ளனர்.
சமயங்கள் வளர்த்த தமிழ் என்று கூறுமளவிற்கு சமயங்களுக்கும் செந்தமிழுக்குமுள்ள இணைப்பும் பிணைப்பும் எளிதில் பிரிக்கப்பட முடியாதவை. சமயங்களால் வளம் பெற்ற தமிழ் இத்தகைய வேறுபட்ட சமயக் கருத்துகளை விளக்க இடமளித்த ஓர் உயரிய பண்பட்ட மொழியாகச் சிறப்படைந்ததாயினும் சமயம் என்ற சிறைக்குள் சிக்காது குறிப்பிட்ட ஒரு சமயத்திற்குரியதுமாகாது தன் தனித் தன்மையினை இழக்காது எல்லாச் சமயங்களையும் அரவணைத்து உயிர்ப்புடன் உயர்ந்து விளங்கும் மாண்பு தெய்வத் தமிழ் என்ற செம்மொழிக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பாகும்.
தமிழைப் 'பக்தியின் மொழி' எனப் போற்றுவார் ஈழத்துத் தமிழ்ப் பேரறிஞர் தனிநாயகம் அடிகளார். ''தமிழ்க் கவிதைகளில் சிறந்த பாடல்கள் இறையுணர்வு பற்றியும் இயற்கையருள் பற்றியுமே'' காணப்படுவதாக "There are excellent works in Tamil poetry on the subject of Divine Attributes and the nature of virture" பெஸ்கி பாதிரியார் (Father Beschi) குறிப்பிடுவதாக அறிஞர் எடுத்துக் காட்டுவர்.
பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ எனப் போற்றப்பட்ட பெரிய புராணம் என்ற பக்திப் பெருநூலின் ஆசிரியர் சேக்கிழாரோ ''ஞானமளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்'' எனத் தமிழ் மொழியைத் தெய்வத் தமிழ் என்றே அறுதியிட்டு உறுதிப்படக் கூறியுள்ளார்.
இன் தமிழை இறைவனுடன் இணைத்துப் பேசுவது மட்டுமின்றிச் சிவனே தமிழைத் தோற்றுவித்ததாகவும் வளர்த்ததாகவும் கூறும் ஒரு வழக்கு நீண்ட நெடுங்காலமாகவே வழங்கி வருகின்றது. வடமொழி, தமிழ் மொழி ஆகிய இரு மொழிகளையும் சிவனே தோற்றுவித்ததாகப் புராணங்கள் கூறுஞ் செய்தியினை,
''ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்'' என அப்பர் பெருமானும்
'' தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானை'' எனத் திருவாசகந் தந்த மாணிக்கவாசகரும் வழிமொழிந்து கூறுவர்.
''ஆதி சிவன் பெற்று விட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோ வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்''
எனச் சிவனே தன்னைத் தோற்றுவித்ததாகத் தமிழே கூறுவதாக மகா கவி பாரதி கூறுவதும் சிந்திக்கத்தக்கது. தமிழை வளர்க்கவெனப் பாண்டிய மன்னர்களால் மதுரையில் நிறுவப்பட்ட முதற் சங்கத்தில்,
''திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும்'' சிவனும் ''குன்றமெறிந்த குமரவேளும்'' முருகனும் தலைமைப் புலவர்களாக வீற்றிருக்க ஐந்நூற்று நாற்பத்தொன்பது (549) பெரும் புலவர்கள் அமர்ந்திருந்து தமிழை ஆராய்ந்ததாக இறையனார் களவியலுரை என்ற பழந்தமிழ் நூல் கூறும் செய்தியினைக்,
''கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோடமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப் பசுந் தமிழ்'' எனத் திருவிளையாடற் புராணம் பேசும்.
''நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழி தருமிக்கருளினோன் காண்'' என அப்பர் தேவாரம் ஓதுகின்றது.
''வானுயர் மதிற் கூடலினாய்ந்த வொண் தீந்தமிழின்...''
என மணிவாசகரின் திருக்கோவையாரும் உறுதி செய்வதுடன் சிவனுக்கும் தமிழுக்குமுள்ள பிரிக்க முடியாத இணைப்பைத் தமிழின் தெய்வீகத்தை மிகத் தெளிவாகவும் அழுத்தந் திருத்தமாகவும் அவை எடுத்தியம்புகின்றன.
இக் கூற்றுகளெல்லாந் தமிழ் மொழியின் ஒப்புயர்வற்ற சிறப்பினைத் தெய்வீக உணர்வினை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் அம்மொழியின் ஆற்றலை விதந்து போற்றுகின்றன. இவ்வாறு இறையனுபவுணர்வுகளை மிக இலாவகமாகச் சித்திரிக்கும் சிறப்புப் பெற்ற தமிழ் மொழி ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தெய்வீகவுணர்வு பொங்கிப் பிரவõகிக்கும் தெய்வத் தமிழ்த் திருநூல்களைப் பக்திப் பனுவல்களைப் பல நூற்றுக் கணக்கில் தோற்றுவித்துள்ளது.
சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையான காலப் பகுதியில் தமிழ் நாடு சேர, சோழ பாண்டியர் என்ற முடியுடை வேந்தர்களின் ஆட்சியிலிருந்தது. தமிழ் மக்களும் இயற்கையோடியைந்த இனிய வாழ்க்கை நடத்தினர். அக்காலத்திய இலக்கியங்களும் அக்கால மக்களால் பெரிதும் போற்றப்பட்ட காதல், வீரம் ஆகிய பண்புகளைப் படம் பிடித்துக் காட்டும் காலத்தால் அழியாத சொல்லோவியங்களாக மிளிர்ந்தன.
திருமுருகாற்றுப்படை, பரிபாடல் போன்ற அக்கால நூல்கள் முருகனையும் திருமாலையும் முதன்மைத் தெய்வங்களாகக் கொண்டு விரிவாகவும் ஏனைய நூல்கள் மேற்குறித்த கடவுளருடன் கொற்றவை, சிவன் ஆகிய தெய்வங்கள் பற்றி ஆங்காங்கேயும் பல செய்திகளைக் குறித்துள்ளனவாயினும் வேற்றுச் சமயங்களின் செல்வாக்கோ அல்லது சமயப் போட்டி, பூசல்களோ எதுவும் தமிழகத்திலிருக்கவில்லை.
தமிழ் மக்களின் இயற்கையோடியைந்த சமய, சமூக, பண்பாட்டு வாழ்வியல் நெறிகள் சிதைந்து சின்னாபின்னமாயின. அரச ஆதரவின்மையால் அவையனைத்துமே கவனிப்பாரற்றுப் போயின கோயில்கள் இடிக்கப்பட்டுச் சமணப் பள்ளிகள் நிறுவப்பட்டன. தமிழர் தம் உயிரினும் மேலாகப் போற்றி வளர்த்த இசை, கூத்து, நடனம், ஆடல், பாடல் போன்ற கலைகள் யாவும் சமணர்களின் தீவிர எதிர்ப் பிரசாரங்களினால் கைவிடப்பட்டன. ஒட்டுமொத்தமாகப் பழம் பெருமைமிக்க ஓர் இனத்தின் நாகரிகம், பண்பாடு, வாழ்க்கை நடைமுறைகள் அனைத்தையுமே இருள் கௌவிக் கொண்டது.
அத்தகையதொரு இருள் சூழ்ந்த நிலையிற்றான் செந்தமிழரின் செழுமை மிக்க செந்நெறிக்கு, பண்பாட்டுக் கருவூலங்களுக்குப் புத்துயிர் அளித்து மீண்டும் அவற்றினை உயர் நிலைக்குக் கொண்டு வருவதற்குமென அவதார புருஷர்களான சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் இணைந்து தமிழ் மக்களை ஒன்று சேர்த்து இயக்கிய இயக்கத்தினையே "பக்தி இயக்கம்' என வரலாற்றாசிரியர் குறிப்பிடுவர்.
அவ்வியக்கத்திற்கு நாயன்மார்களும் ஆழ்வார்களும் தலைமை தாங்கினர். "திராவிடச் சிசு' என ஆதி சங்கரரால் விதந்து போற்றப்பட்ட ஞான சம்பந்தர், ''தமிழ் மொழித் தலைவர்'' எனச் சேக்கிழாரால் விதந்து கூறப்பட்ட நாவுக்கரசர் ஆகிய அருளாளர்கள் தலைமையில் சைவ அடியார்களும், ''வேதம் தமிழ் செய்த மாறன்'' எனப் புகழ்ந்து பாராட்டப்பட்ட நம்மாழ்வார், ''சூடிக் கொடுத்த நாச்சியார்'' என மிக உயர்வாகப் பேசப்பட்ட ஆண்டாள் ஆகிய அருளாளர்கள் தலைமையில் வைணவ அடியார்களும் சைவ வைணவத் திருத்தலங்கள் தோறும் தல யாத்திரை மேற்கொண்டு பண்ணமைந்த பக்திப் பாசுரங்கள் பல்லாயிரக்கணக்கில் பாடினர்.
அவர்கள் வெறும் கவிஞர்கள் மட்டுமல்லர்; புறச் சமயங்களின் வன்முறை சார்ந்த தீவிர எதிர்ப் பிரசாரங்களாலும் வேதனை மிக்கப் போதனைகளாலும் வாழ்க்கையில் விரக்தியடைந்த மக்களுக்கு மனித வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிக்க உருவான பக்தி இலக்கியம் என்ற பேரியக்கத்தின் அரிய செய்திகளை சொல்வதற்கு ஒரு கருவியாகவே பயன்படுத்திய தெய்வீகக் கவிஞர்கள் அவர்கள்.
| |
| --------------------------------------------------------------------------------------------------- |
| |
|
| --------------------------------------------------------------------------------------------------- |
| |
|