|
கலாநிதி (திருமதி) விவியன் சத்தியசீலன்
எம்முன்னோர்கள் இயற்கையின் படைப்பாகிய மருத்துக் குணம் நிறைந்த, பக்க விளைவுகள் அற்ற மூலிகைகள் கொண்டு தமது வாழ்வை ஆரோக்கியம் மிக்கதாகவும், அழகு நிறைந்ததாகவும் ஆக்கிக்கொண்டார்கள். தற்காலத்தில் உள்ளதைப் போன்று அழகு சாதனப் பொருட்கள் எதுவும் இல்லாத காலத்தில் கூட அவர்கள் அழகுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள் என்பதை நாங்கள் மறந்து வருகிறோம். மேலும் அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து கொள்வதில் கூட ஆர்வம் அற்றவர்களாக உள்ளோம். இதற்கான மிக முக்கிய காரணம் எம்மில் ஏற்பட்ட நவீன முறையிலான வாழ்க்கைமுறையின் தாக்கங்கமே ஆகும்.
பழங்காலத்தில் இளநரையைத் தடுத்து ஆரோக்கியமான நீண்ட கரிய கூந்தலைப் பெறுவதற்கு இயற்கையான முறையிலான சாயப்பொடியைத் (Natural henna heir dye powder) தயாரித்துப் பயன்படுத்தினார்கள். அதை எவ்வாறு தயாரித்தார்கள் என்பதை வாசகர்களுக்காகத் தருகிறோம்.
கரிசலாங்கண்ணி (வெள்ளைச் சரிசாலை), கறிவேப்பிலை, மருதோன்றி ஆகிய மூன்று மூலிகைகளையும் சம அளவில் (ஒவ்வொன்றும் தலா 500 கிராம் எடுக்கலாம்.) தனித் தனியாகச் சேகரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். கரிசலாங்கண்ணிச் செடியின் முழுப் பகுதிகளையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக நிழலில் உலர்த்தவும். அதேபோன்று கறிவேப்பிலை, மருதோன்றி இலைகளையும் நன்றாகக் கழுவி உலர்த்தி எடுக்கவும். மூன்று மூலிகைகளையும் தனித் தனியாக இடித்து, பின்னர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து இடித்துத் துணியில் அரித்து, காற்றுப் புகாத பாத்திரத்தில் அடைத்துக் கொள்ளவும். இளநரை உள்ளவர்கள் தங்கள் கூந்தலின் அளவுக்கேற்ப தேவையானளவு கலவையை எடுத்து, தண்ணீர் விட்டு நன்றாகக் கலக்கி, அரை மணி நேரம் விட்டு, எண்ணெய்ப் பசையற்ற கூந்தலில் சுத்தமான தூரிகை கொண்டு அடி மயிரில் இருந்து நன்றாகப் பூசி, இரண்டு மணி நேரம் ஊறவிட்டு, பின்னர் குளிர் நீரால் கழுவ வேண்டும்.
தலையில் ஏற்படும் அதிக உஷ்ணம் காரணமாகவே பொடுகு ஏற்படுகிறது. செயற்கை சம்போ வகைகளைப் பயன்படுத்துவது பொடுகுத் தொல்லையை மேலும் அதிகரிக்கும். எனவே செயற்கை சம்போவிற்குப் பதிலாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான மூலிகைப் பவுடரைப் பயன்படுத்தலாம். இதற்காக பைலா சம்போ பவுடர் (Phylla shampoo powder) எவ்வாறு தயாரிப்பது என்பதைப் பார்ப்போம்.
பொடுதலை, வெந்தயம், சீயாக்காய், நிலலில் உலர்ந்த செவ்வரத்தைப் பூ இதழ், உலர்ந்த தேசிக்காய்க் கோது, உலர்ந்த புனலைப் பழம் ஆகியவற்றை முறையே 5:2:3:1:2:2 விகிதத்தில் (முறையே 500 கிராம், 200 கிராம், 300 கிராம், 100 கிராம், 200 கிராம், 200 கிராம் என்ற அளவுகளில் எடுக்கலாம்.) எடுத்துக் கொள்ளவும். பொடுதலைச் செடியை வேருடன் சேகரித்து நிழலில் உலர்த்தி எடுக்கவும். உலர்ந்த செவ்வரத்தை பூ, உலர்ந்த தேசிக்காய்க் கோது தவிர்ந்த் மற்றைய பொருட்களை நன்கு கழுவி, நிழலில் உலர்ந்து எடுக்கவும். பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்ந்து உரலில் இடித்து காற்றுப் புகாத பாத்திரத்தில் அடைத்துக் கொள்ளவும். கூந்தலின் அளவுக்கு ஏற்ப தேவையான அளவு பவுடரை எடுத்து நன்றாகத் தேய்ந்து முழுகி வருவதால் பொடுகுத் தொல்லை நீங்கி ஆரோக்கியமான கூந்தல் கிடைக்கும்.
முன்னோர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாகவும் அவர்களுக்கு இளவயதில் நரை ஏற்படுவது குறைவாக இருந்தது. ஆனால் தற்காலத்தில் அதிகளவானவர்களுக்கு இளவயதில் நரை ஏற்படுகிறது. இளவயதில் ஏற்படும் நரையைப் போக்கக்கூடிய எண்ணெய் எவ்வாறு தயரிப்பது எனப் பார்க்கலாம்.
உலர்ந்த கரிசலாங்கண்ணி, உலர்ந்த கறிவேப்பிலை, உலர்ந்த மருதோன்றி இலை ஆகிய மூன்றையும் சம அளவில் (தலா 70 கிராம்) எடுத்துக் கொள்ளவும். மூன்று மூலிகைகளையும் தனித் தனியாக உரலில் இடித்து, பின்னர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து இடித்து, ஒரு துணியில் அரித்து எடுக்கவும். தாச்சி ஒன்றில் இரண்டு போத்தல் நல்லெண்ணெய் விட்டு நன்றாகக் கலக்கி, ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை சூரிய வெப்பத்தில் பதினைந்து நாட்கள் வைத்தெடுக்கவும்.பதினாறாம் நாள் எண்ணெயைத் தெளிவெடுத்து, ஈரமற்ற பாத்திரத்தில் விடவும். இம்மூலிகை எண்ணெய் இளநரையை மாத்திரம் போக்காமல், வயது மூப்பால் ஏற்படும் நரையையும் போக்க வல்லது.
மேலும் சங்க காலத்தில் மருதோன்றி இலைகளை எலுமிச்சை பழச்சாற்றில் அரைத்து பெண்கள், கை, கால், விரல் நகங்காளுக்குப் பூசி அழகு சேர்த்திருக்கிறார்கள். வளரும் குழந்தைகளுக்கும், வலுக் குறைந்த பெரியவர்களுக்கும், இரும்புச் சத்தை இழக்கும் பெண்களுக்கும் கறிவேப்பிலை சிறந்த உணவாகப் பயன்பட்டது. தொற்று நோய்களை எதிர்க்கும் சக்தி, இரத்தத்தைச் சுத்தம் செய்யும் திறன், புண்களை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல், குறிப்பாக வாய்ப்புண்களை குணப்படுத்தும் சக்தி ஆகிய குணங்கள் கறிவேப்பிலைக்கு உண்டு. தலை முடியின் வளர்ச்சிக்கும், வனப்புக்கும் உதவும் ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகமாகக் காணப்படுகின்றன.
எனவே இயற்கை அன்னையின் கொடைகளான மூலிகைகளை நம் முன்னோர்களின் வழிகாட்டலில் நாமும் முறையாகப் பின்பற்றினால் நலமோடும், அழகோடும், ஆரோக்கியத்தோடும் வாழலாம்.
வெள்ளைக் கரிசலாங்கண்ணி (வெள்ளைக் கரிசாலை) Botanical Name - Wedelia Chinensis Family - Compositae Sinhala Name - Wan - Kikirindiya இம்மூலிகை மணற் பாங்கான இடங்களில் வளரும் தன்மை கொண்டாலும் நீர்ப் பற்றுள்ள இடங்களில் அதிகமாக வளரும். இவை ஒரு அடி உயரம் வரை வளரும்.
கறிவேப்பிலை Botanical Name - Murraya Koenigii Family - Rutaceae Sinhala Name - Karapincha இவை 20 - 25 அடி வரை உயரம் வரை வளரக் கூடியவை. மரம், கிளை ஆகியவை கருமை நிறமுடையவை. வைகாசி மாதங்களில் கொத்துக் கொத்தாகப் பூக்கும். பூக்கள் மென்மையானவையுடன் பழங்கள் கருமையானவை. கரிசல் மண்ணில் அதிகமாக வளரக் கூடியவை.
பொடுதலை Botanical Name - Lippia Nodiflora Family - Verbenaceae Sinhala Name - Hiramana - Detta இது ஈரப் பசை உள்ள குளக்கரை, வாய்க்கால் ஓரம் போன்ற இடங்களில் படரும் குறுஞ் செடியாகப் பரம்பக் கூடியது. வேர்க் கன்று, விதை மூலம் இனம் பெருகும். உடம்பில் ஏற்படும் மூலம், பொடுகு போன்ற உஷ்ண நோய்களை நீக்கக்கூடியது.
மருதோன்றி Botanical Name - Lawsonia Inermis Family - Lythraceae Sinhala Name - Marithondi நிறைந்த மணம் உள்ள சிறிய மரமாகும். இவை ஆறு மீற்றர் வரை வளரக் கூடியவை. பொதுவாக தரிசு நிலங்களில் பரம்பல் அதிகமாகக் காணப்படும். விதைகள், வேர்க் கன்றுகள் மூலம் இன விருத்தி ஏற்படும்.
தொகுப்பு - பிரியங்கா
| |
| --------------------------------------------------------------------------------------------------- |
| |
|
| --------------------------------------------------------------------------------------------------- |
| |
|