|
இவர் யாழ்ப்பாணத்து நல்லூரிலே சாலிவாகன சகாப்தம் 1759 க்குச் சமமான ஏவிளம்பிளு சித்திரை மாதம் 24 ந் திகதியிற் பிறந்தவர். இவர் தந்தையார் வைசிய குலத்துப் பிறந்த சரவணமுத்துச் செட்டியார். இவர் தாயார் ஆறுமுகநாவலர்க்குத் தமக்கையார். ஆகையால் இவர் அவருக்கு மருகராவார்.
இவர் தமது இளமையிற்றொடங்கி நல்லூரிலிருந்த கார்த்திகேய உபாத்தியாயரிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்று வந்தபின் தன் மாமனாராகிய நாவலரிடமும் பலகாலங் கற்றவர். அவர்களிடங் கற்றவளவிலமையாது தமது துண்மாணுழை புலங்கொண்டு சங்க இலக்கியங்களையும், சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, இராமாயாண முதலிய இலக்கணங்களையும், தொல்காப்பிய மென்னும் பேரிலக்கண நூலையும் பலமுறை துருவித்துருவி ஆராய்ந்து கற்றவர்.
படித்தவற்றை ஒரே முறையிலவதானிக்கும் ஞாபக சக்தியமைந்தவர். பாடுஞ் சக்தியுமுள்ளவர். கோவில்களிலும், மடங்களிலும், வீடுகளிலும் கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், கம்பராமாயணம் முதலியவற்றைப் படித்துப் பொருள் சொன்னவர். பொருள் சொல்லுங்கால் கேட்டவர்கள் 'யாழிசையோ பாரதிதன்னின்னிசையோ' என்று அயிர்க்குமாறு தமக்கு இயற்கையாயமைந்த இனியமிடற்றோசையோடும், விரிவுரையோடும் சொல்லின்பமும் பொருளின்பமும் தோன்றச் சொல்வர்.
இவர் சொல்லும் பொருளிலே பரிமேலழகர் நச்சினார்க்கினியர் பேராசிரியர் முதலியோருரைத்த உரைத் திறங்களெல்லாம் அமைந்து மிளிரும். வாக்கிற் பிறக்கும் உரையும் பரிமேலழகர் உரைபோலத் தெளிவும் இனிமையும் பொருந்தி ஒளிரும். இவர் பொருள் சொல்லும் அழகையும் இனிமையையுங் கேட்பதற்காக யாழ்ப்பாணத்திலே பற்பல ஊர்களிலுமுள்ள பிரபுக்களும் அறிஞர்களும் தத்தங் கோயில்களிலே புராணபடனம் நடக்குங் காலத்திலே இவரை அழைத்துப் பொருள் சொல்லுவித்துக் கேட்டு மகிழ்வர்.
சபைகளிலே இவர் சொல்லும் பொருளைக் கேட்கவந்த சனங்கள் அப்பொருளிலுள்ள இன்பங்களை நுகரும் அவாவினாலே சத்தஞ் செய்யாது தாமே அடங்கி இருந்து கேட்பர். ஒருமுறை இவர் வண்ணார்பண்ணைச் சிவன்கோவில் வசந்த மண்டபத்திலே பெரிய புராணம் படித்தபோது திருஞானசம்பந்தர் திருக்கலியாணப் படிப்பைக் கேட்பதற்காக ஆயிரக் கணக்கான சனங்கள் வந்திருந்திருந்தார்கள். இருப்பதற்கு மண்டபம் இடம்பெறாமையால் நெருக்கமுற்றுச் சனங்கள் சத்தம் செய்யத் தொடங்கினார்கள். அங்குள்ள அதிகாரிகள் சத்தஞ் செய்யவேண்டாமென்று சொல்லி அமைதி செய்துங்கேளாமல் சனங்கள் சத்தஞ் செய்தார்கள்.
அப்பொழுது இவர்களை அமைதி செய்தற்குரிய உபாயம் தாம் படிக்கத் தொடங்குதலேயென்று கருதி இவர் காப்புச் செய்யுளைப் படிக்கத் தொடங்கினார். உடனே சனங்கள் எல்லாம் நெருக்கத்தையும் நோக்காமல் அமைதியாயிருந்து விட்டார்கள். இதனால் சனங்களுக்கு அவர் சொல்லும் பொருளைக் கேட்டலில் எவ்வளவு அவா இருந்ததென்பதையும் இவர் சொல்லும் பொருட்சுவையின் மேன்மை எவ்வளவு என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.
இன்னும் கம்பராமாயணத்திற்கு இவர் பொருள் சொல்வது மிக விசித்திரமாயும் மிக இன்பமாயுமிருக்கும். இவர் சொல்லும் நூதனப் பொருள்களைக் கேட்டோர் கம்பன்றான் மீளவும் பிறந்து தான் பாடிய இராமாயணத்திற்குப் பொருள் சொல்லுகின்றானோவென்று அதிசயமுறுவர். இவர் பொருள் சொல்லும் போது நச்சினார்க்கினியரையும் சிவஞான முனிவரையும் போலச் சில இடங்களிலே செய்யுள்களில் வரும் சொற்களை நூதனமாகப் பிரித்துப் பொருள் கொள்வர்.
ஒருமுறை இவர் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலிலே கந்தபுராணத்துத் திருக்கலியாணப் படலத்திற்குப் பொருள் சொன்னபோது,
''பூசனை புரிந்த பின்னர்ப் புவனமீன் றாடன் கையைப் பாசம தகன்ற தொல்சீர்ப் பரஞ்சுடர் கரத்துள் வைத்து நேசமொடளித்தே னென்னா நெடுமறை மனுக்கள்கூறி வாசநல் லுதக முய்த்தான் மருகனென் றவனை யுன்னி.''
என்னுஞ் செய்யுளில் 'மருகனென்றவனையுன்னி' யென்றதற்குப் பொருள் சொல்லுங்கால் மருகனென்று + அவனையுன்னி என்று பிரிக்கவேண்டியதை அங்ஙனம் பிரியாது; என்றவனையென ஒரு சொல் விழுக்காடாகக் கொண்டு அதற்கு என்று அவமதித்த தங்களை யென்று பொருள் கூறி யான் இப்பொழுது சிவனை மருகனென்று நினையாமல் கடவுளென்றே நினைப்பேன் தக்கன் சிவனைக் கடவுளென மதியாது மருகனென்று அவமதித்தமையானே தலையிழந்தானன்றோ எனத் தக்கன் தலையிழந்த நினைப்பு அப்பொழுது மலையரசனுக்குண்டாயது.
அதனால் இவ்வாறு கூறினாம் என்று தாம் சொன்ன பொருளுக்குக் காரணமும் கூறி முடித்தனர். சில இடங்களிலே தமது ஆராய்ச்சி அறிவு தோன்றவும் பொருள் கூறுவர். கந்தபுராணத்துத் தெய்வயானை திருமணப் படலத்தில் வரும் 'மாவொடுவாழை வருக்கைகொள் பைங்காய் தீவிய கன்னல் செறிந்திடு செந்தேன் ஆவருள் பாலியை யண்டர்கள் செம்மல் மூவிரு மாமுக னைநுகர் வித்தான்' என்னுஞ் செய்யுளுக்குப் பொருள் சொல்லுங்கால்; மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், இனிய சர்க்கரை, தேன், பால் என்னும் ஆறு பொருள்களையும் ஆறுமுகங்களுமாக நிவேதனம் செய்தான் என்று பொருள் கூறி அதற்குச் சான்றாக வள்ளியம்மை திருமணப்படலத்து வரும் 'செந்தினை இடியும் தேனும்' என்பதை முதலாகக் கொண்ட செய்யுளிலும் இவ்வாறே ஆறுபொருள்களை ஆசிரியர் அமைத்துக் கூறி இருத்தல் காண்க வென்று பொருள் கூறினார். இப்படிப் பல. இவற்றையெல்லாம் விரிக்கிற் பெருகும்.
யான் இவரிடம் படிக்கும்போதும் வண்ணார்பண்ணைச் சிவன்கோவில் வசந்த மண்டபத்திலே கந்தபுராணமும், பெரியபுராணமும், இராமயணமும் முறையே படிக்கப்பட்டன. அப்பொழுது அவற்றிற்கு இவரே பொருள் சொன்னார். இவர் சொல்லும் பொருளைக் கற்றவர்களும் பலர் வந்து கேட்டுச் செல்வர். கற்வர்களும் பலர் வந்து கேட்டு இவர் சொல்லும் பொருள்களுள் அரியனவற்றைக் காகிதங்களில் குறித்துஞ் செல்வர். இங்ஙனம் கேட்டும் குறித்தும் அறிஞர்களாயினோர் பலர். கந்தபுராணம் முதலிய அந்நூற் குறிப்புக்கள் இப்போதும் பலரிடம் உண்டு. இவரிடம் கேட்டுக் குறித்த பெரியபுராணக் குறிப்புக்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிவரும் 'செந்தமிழ்'ப் பத்திரிகையிலே திருவாரூர்ச் சோமசுந்தர தேசிகரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நிற்க:
இவரிடம் நேரே கற்றவர்கள் யாழ்ப்பாணத்திற் பலர்; இந்தியாவிலும் சிலர். அவர்களுள் சிதம்பரத்திலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலையிலே தலைமையாசிரியராயிருந்து கற்பித்தவரும் திருவாதவூரடிகள் புராணம் அபிராமி அந்தாதி, புலியூர் அந்தாதி எனும் நூல்களுக்கு உரை எழுதியவரும் ஈழமண்டல சதகமென்னும் நூலை இயற்றியவரும், உரையாசிரியர் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றவருமாகிய மட்டுவில் க.வேற்பிள்ளையும் ஒருவராவர்.
சிவஞானமாபாடியம், திருக்கோவையாருண்மை முதலிய நூல்களைப் பிழையறப் பரிசோதித்து அச்சிட்டு வெளிப்படுத்தியவரும் இந்தியாவிற் சென்று வசித்து அங்குள்ள பற்பலவூர்களில் பிரசங்கங்கள் செய்து சைவசமயத்தை விருத்தி செய்தவருமாகிய சுவாமிநாத பண்டிதரும் ஒருவராவார். புராணேதிகாசங்களுக்கும் கோவையந்தாதி முதலியவற்றிற்கும் இவர்போலப் பொருள் சொல்ல வல்லவரும் கவிபாட வல்லவருமாகிய வண்ணார்பண்ணை சி.பொன்னுத்துரை ஐயரும் ஒருவராவார்.
சிதம்பரத்திலுள்ள சைவப் பிரகாச வித்தியாசாலையிலே சிலகாலம் தலைமையாசிரியராயும், பலகாலம் தலைவராயும்; இருந்தவரும் இவரது மருமகனுமாகிய ச.பொன்னம்பலபிள்ளையும் ஒருவராவார். 'உதயபானு', 'இந்துசாதனம்' முதலிய பத்திரிகைளில் சமய விஷயமும் பிறவுமாகப் பல அரிய விஷயங்களை எழுதி வெளிப்படுத்தியவரும் பல அரிய நூல்களுக்கு ஆக்கியோனாய் விளங்கிவருமாகிய கொக்குவில் க.சபாரத்தின முதலியாரும் ஒருவராவார்.
வண்ணார்பண்ணை இந்துக் கல்லூரித் தமிழ்ப் பண்டிதராயிருந்த தாவடி, ஆ.மு.சோமாஸ்கந்தப்பிள்ளையும் ஒருவராவார். கந்தர்மடம் வை.சி.சி.சிவகுருநாதப்பிள்ளையும் ஒருவராவார். கொக்குவில் பண்டிதர் தம்பு என்பவரும் ஒருவராவார். இராமநாத மான்மியம் அருணாசலமான்மியம் முதலிய நூல்களை இயற்றியவரும் புலவருமாகிய சாவகச்சேரி ச.பொன்னம்பலப்பிள்ளையும் ஒருவராவார். இந்நியாவிலுள்ள தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்த உரத்தூர் கோ.வைத்தியலிங்கப் பிள்ளையும் ஒருவராவார்.
திருவாவடுதுறை ஆதீனஸ்தராய் விளங்கிய பொன்னோதுவாரும் ஒருவராவார். மேற்படி ஆதீனஸ்தர் சுப்பிரமணிய ஓதுவாரும் ஒருவராவார். காரைக்குடி சொக்கலிங்கச் செட்டியாரும் ஒருவராவார். பழனிக் குமாரசுவாமித் தம்பிரானும் ஒருவராவார். வடகோவைச் சபாபதி நாவலரும் இவரிடம் சில நூல்கள் கற்றனர் என்பர்.
இவர் வேதாரணியம், தேவகோட்டை முதலிய இடங்களிலும் சிலகாலம் வசித்தவர். வேதாரணியத்து வசித்த காலத்தில் நற்றிணை உரையாசிரியர், பின்னத்தூர் நாராயணசாமி ஐயரும் சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் தமக்கு நேர்ந்த ஐயங்களை இவரிடம் கேட்டுத் தெளிந்தனர் என்று அந்நற்றிணை என்னும் நூலின் முகப்பில் எழுதப்பட்டுள்ளன.
இவர் பாரதத்தில் சில பருவங்கட்கும் மயூரகிரிப் புராணத்துக்கும் உரையெழுதி அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ளார். இவராலேயே யாழ்ப்பாணத்து நல்லூர் மகா வித்துவான் அரசகேசரி தமிழில் மொழிபெயர்த்து இயற்றிய இரகுவம்சம் என்னும் நூல் பரிசோதித்து அச்சிடப்பட்டது.
யாழ்ப்பாணத்துப் புலவர்களுள் மிகச் சிறந்த புலமை படைத்த இவர் சாலிவாகன சகாப்தம் 1825க்குச் சமமான ஏவிளம்பி வருஷம் மார்கழி மாதத்தில் தேகவியோகமடைந்தார்.
| |
| --------------------------------------------------------------------------------------------------- |
| |
|
| --------------------------------------------------------------------------------------------------- |
| |
|