கலைமுகம் நூல்

2012-06-15 14:04:44


  Share
 
 
 

பல்வேறான இலக்கிய சுவைகளுடன் கலைமுகம் சஞ்சிகையின் 53 ஆவது இதழ் முகிழ்ப்புக் கொண்டிருக்கிறது. வழமைபோலவே நுணுக்கமான சிந்தனை, பரந்த மன வெளிப்பாடு, பல்முக அர்த்தம் எனச் சிந்தனைகளை மன வெளிகளில் தூவும் தத்ரூபமான அட்டைப் படத்துடன் இவ்விதழும் வெளிவந்திருக்கிறது. 

கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், பக்தி,தொடர் நூல் மதிப்பீடுகள் என்ற விடயங்களுடன் ஏனைய நாட்டு எழுத்தாளர்களின் மன ஓட்டங்களை அவ் எழுத்தாளர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்ற மக்கள் குழுமத்தினரின் வாழ்வியல் நீரோட்டத்தை நாடி பிடித்து அறியும் நன்முயற்சியாக மொழி பெயர்ப்பு ஆக்கங்களுக்கும் இச்சஞ்சிகை வெளிவந்துள்ளமை வரவேற்கத்தக்கது.

குறிப்பாக மொழி பெயர்ப்பு கட்டுரைகள் நான்கும் மொழி பெயர்ப்பு சிறுகதைகள் இரண்டும் இச் சஞ்சிகையில் இடம்பெற்றுள்ளன. கலை முகம் இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வரைந்திருக்கும் ஆசிரியத் தலையங்கம் சமகால வாழ்வியல் நகர்வை துலாம்பரப்படுத்தி நிற்கிறது. இவரது கருத்திலிருந்து சமூகப் பிரக்ஞையிழந்த சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறியிருக்கிறது. 

போருக்கு பிற்பட்ட சூழலில் ஈழத் தமிழினத்தின் பண்பாட்டு விழுமியங்கள் எல்லாமே கருவறுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக ஆதங்கப்படுகிறார். நடைபெற்று முடிந்த போரினால் இழக்கக்கூடாத அறிவுரையோர் பலரை இழந்திருக்கிறோம். பெறக்கூடாதவைகளையெல்லாம் பெற்றிருக்கின்றோம் என்ற நிதர்சன கருத்து இழையோடியிருப்பதை அவதானிக்க முடிகிறது. 

அப்போரி@ல நாம் மண்ணை இழந்தோம். மனைகளை இழந்தோம். மக்களை இழந்தோம். இன அடையாளங்களை இழந்தோம் என பட்டியலிட்டுக் கூறும் ஆசிரியர் காலம் செல்லச் செல்ல நமது இருப்பையும் இழந்து விடுவோமோ எனவும் அச்சம் வெளியிட்டுள்ளார். 

போரின் பரிசுகளாக பின்வருவனவற்றையும் பட்டியலிடுகிறார். இளைஞர்கள் குடித்து வெறித்து கும்மாளம் போடும் வாய்ப்புகள் தாராளமாகக் கிடைக்கின்றன. உல்லாச விடுதிகளில் மதுவும் மாதுவும் மலிந்து போயுள்ளன. குழந்தைகளும் இளைஞர்களும் தமது இளமையின் சிறப்பை மறந்து பிஞ்சிலே முற்றி பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் பாலியல் வல்லுறவுகள் வகை தொகையின்றி நடைபெறுவதையும் கொலைகள் களவுகள் முதலிய சமூக விரோத செயல்கள் தலைவிரித்தாடுவதையும் ஊடகங்கள் நாளும் பொழுதும் எடுத்துக் கூறிய வண்ணம் இருப்பதாக கழிவிரக்கப்படுகிறார்.

போரின் பின்னர் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இத்தகைய மாற்றங்களைக் களைவதற்கு தீர்வுகளையும் சொல்லியிருக்கிறார். இதற்கு ஆக்க இலக்கிப் படைப்பாளிகளின் பங்கும் பணியும் மிக காத்திரமானதாக இருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டுகிறார்.

இதில் சி.ரமேஷ் எழுதிய ஈழத்து சிறுவரிலக்கிய வரலாற்றிப்புலத்தில் மயிலங்கூடலூர் நடராசன் என்ற கட்டுரை இடம்பிடித்திருக்கிறது. ஈழத்தில் வளர்ந்தோருக்கான இலக்கியங்கள் வெளிவந்த போதிலும் சிறுவர் இலக்கியத்தைப் படைப்போர் குறைவு. இந்த வகையில் ஈழத்து சிறுவர் இலக்கியத்திற்கு பெரும் பங்களிப்பை நல்கிய மயிலங்கூடலூர் நடராசன் பற்றிய பார்வையும் பதிவும் இடம்பெற்றிருக்கிறது.

அடுத்ததாக ஜெயராஜ் எழுதிய 'முகிழ்' என்ற ஓவியத்துறை சம்பந்தமான கட்டுரை. ரிஷான் ஷெரிப் எழுதிய 'சின்னவனை சுற்றியிருக்கும் சுழிக்காற்று' என்ற கட்டுரையும் இதிரிஸ் எழுதிய 'வாழ்வும் கோடும்' என்ற கட்டுரையும் ஜெரா எழுதிய "இரண்டு மரங்களுக்கிடையிலான கதை' என்ற கட்டுரையும் து. கௌரீஸ்வரன் எழுதிய 'மொழிகளின் போராட்டத்தில் தமிழ்' என்ற கட்டுரையும் இவ் இதழை அணி செய்கின்றன.

எல்லோரும் விரும்பிப் படிக்கும் ரசனை மிகுந்த இலக்கிய வடிவமாகிய கவிதைகளும் இவ்விதழை அலங்கரிக்கின்றன. யோகி, ரிஷான் ஷெரிப், அனார் ரஜீபன், தீபச் செல்வன், குமாரதீபன், துவாரகன் ஆகிய ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகள் பதிவு பெற்றிருக்கின்றன. 

அ.கேதீஸ்வரன் எழுதிய 'ஆண்களின் தீவு' என்ற சிறுகதையும் தாட்சாயினி எழுதிய 'உள்ளேதான் உள்ளாயோ ...' என்ற சிறுகதையும் இடம்பெற்றுள்ளன. மேலும் குப்பிளான் ஐ.சண்முகனின் பயணங்கள் என்ற தலைப்பிலமைந்த பத்தியும் விக்னேனஸ்வரனின் தொடர்பாடலும் நோக்கமும் என்ற தலைப்பிலமைந்த பத்தியும் இவ்விதழை அணி செய்கின்றன. 

சுமார் 25 வரையான இலக்கிய ஆளுமைகளின் பெறுமதிமிக்க ஆக்கங்கள் இடம்பெற்றிருப்பது இவ்விதழுக்கு வலிமையூட்டுகின்றன.

மொத்தத்தில் கலைமுகம் சஞ்சிகை பார்ப்போர் மனங் கவரும் நேர்த்தியான அட்டைப்பட வடிவமைப்புக்கள், படங்கள், விடயப் பொருள் என அனைத்துமே இச் சஞ்சிகைக்கு முழுப் பரிமாணத்தை வழங்கியிருக்கிறது. திருமறைக் கலாமன்றத்தின் வெளியீடாக வருகின்ற இச்சஞ்சிகையின் உயிர்ப்புக்கு காரணமாக விளங்கும் மரிய சேவியர் அடிகள் பாராட்டப்படவேண்டியவர். 

பல்வேறு இடர்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் ஆரவாரமில்லாது ஆணித்தரமாக உறுதியுடனும் தெளிவுடனும் மொழி ரீதியாகவும் கலைபண்பாட்டு ரீதியாகவும் மக்களின் தேவைகளினையும் மனங்கொண்டு தன் உடல் பொருள் ஆவி அத்தனையும் தமிழுக்கும் தமிழினத்திற்கும் அர்ப்பணித்திருக்கின்ற இவர், தமிழிலக்கிய உலகில் கணிசமான முக்கியத்துவத்தை உடையவராகத் திகழ்கிறார். இவரின் பொறுப்பு மிக்க சேவையும் விடாமுயற்சியும் தான் இச் சஞ்சிகையின் 53 ஆவது இதழ் நிச்சயப்படுத்தியிருக்கிறது.

எஸ். நதிபரன்


 
---------------------------------------------------------------------------------------------------
 
---------------------------------------------------------------------------------------------------
 
 
 
 

© 2012 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved
Powered by Virakesari Online
Comments/Feedback: editor@yarlmann.lk
yarlmann Facebook yarlmann twitter yarlmann Video