புதிய வின்சர் (1968 - 1990)

2012-06-25 11:53:50


  Share
 
 
 

யாழ் நகரில் உருவாக்கப்பட்ட திரை அரங்குகளின் வரிசையில் 1968 ஆம் ஆண்டு சிறந்த கட்டிட அமைப்புடனும் பிரமாண்ட வெளியினையும் நவீன முறையில் அமைக்கப்பட்டதாக புதிய வின்சர் திரை அரங்கு வருகிறது. 

இதனை டபிள்யூ. தம்பு, றொபின் தம்பு சூரி தம்பையா போன்றவர்கள் இணைந்து பாரிய முதலீட்டுடன் பாரிய திரை, பிரமாண்ட பெல்கனி, விசாலமான ஜன்னல்கள் என சிறப்பான முறையில் கட்டப்பட்டதாகும். 

இது பழைய வின்சருக்கு அருகில் கஸ்தூரியார் வீதியில் அமைக்கப்பட்டதாகும். இதன் கட்டிட அமைப்பானது முன் ஐம்பது அடி நீளமான பாரிய திரையும், அடுத்து கலறி ஒவ்வொன்றும் கதிரைகளுடனும், தொடர்ந்து முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ஆசனங்கள், குசன் சீற் போடப்பட்ட ஆசனங்களுடன் றிசேவ் மற்றும் பெல்கனியில் சொகுசு ஆசனங்களும் போடப்பட்டிருந்தது. 

இவ்வாறு கலறியில் இருந்து றிசேவ் வரை ஒவ்வொரு வரிசையும் படிக்கட்டுக்களாக கீழிருந்து மேல் நோக்கி உயர்ந்த வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ஜன்னல் அமைப்பானது எட்டு அடி உயரமும் மூன்று அடி அகலமும் கொண்டு பிரமாண்டமாக விசாலமான காற்றோட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் வரும் தென்றல் காற்று அரங்கில் இருந்து படம் பார்க்கும் போது திரைப்பட இரசனையுடன் தென்றலின் இனிமையும் மனதுக்கு இனிமை தருவதாக இருந்தது என்பது அக்கால இரசிகர்களின் கருத்து. 

இதனது பெல்கனி ஆனது நூறு பேர் அமர்ந்து பார்க்கும் வண்ணம் பிரமாண்டமான படிவரிசையாக சொகுசு ஆசனங்கள் போடப்பட்டு அமைந்திருந்தது. மேலும் இயந்திர இயக்குனர் அறை, மலசலகூடம், ஊழியர்களுக்கான அறைகள், வாகன தரிப்பிடம் என சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்ட முதலாவது திரை அரங்காக வின்சர் திகழ்ந்தது. 

இவ்வாறாக 1968 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஐந்தாம் திகதி அப்போதைய சிலோன் திரையரங்க முகாமையாளர் கே.செல்லமுத்து என்பவரால் வின்சர் திரை திறந்து வைக்கப்பட்டது. இங்கு திரையாகிய முதல் திரைப்படம் சிவாஜி கணேசன் நடித்த 'இருமலர்கள்' ஆகும். 

இப்படம் திரையிடுவதற்கு பல்வேறுபட்ட குழப்பங்கள், சண்டைகள் மத்தியில் இப்படம் திரையிடப்பட்டது. காரணம், அப்போதைய யாழ்ப்பாண இரசிகர்கள் மத்தியில் எம்.ஜி.ஆர் மன்றம், சிவாஜி இரசிகர் மன்றங்கள் காணப்பட்டன. எம்.ஜி.ஆர் படத்தினைத் தான் திரையிட வேண்டும் என முரண்பட்டனர். அல்லாவிடில் திரை அரங்குக்குக் குண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் மிரட்டினர். 

இருப்பினும் இதனை பொருட்படுத்தாது அப்போதைய வின்சர் முகாமையாளர் கே.பூபாலசிங்கம் அவர்கள் 'இருமலர்கள்' திரைப்படத்தினை சிவாஜி ரசிகர்களின் பேராதரவோடு திரையிட்டார். முதல் நாளிலேயே அதிக வசூலை திரைப்படம் ஈட்டியது. காரணம் வின்சர் ஏற்கனவே மக்கள் மனதில் பதிந்த திரை அரங்கம் என்பதாலும் இப்பொழுது நவீன வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டமைதான்.

இதனை அடுத்து திரையிடப்பட்ட இரண்டாவது திரைப்படம் 'இரகசிய பொலிஸ்'. இதுவும் சிறந்த வசூலினை பெற்று ஓடியது. இதனை தொடர்ந்து வின்சர் திரைப்பட வரலாற்றில் வரலாறு காணாத வெற்றிகளை பல திரைப்படங்கள் தந்திருந்தன. அந்த வகையில் 'பைலட் பிரேம் நாத்', 'நிறம் மாறாத பூக்கள்' போன்ற திரைப்படங்கள் நூற்றிஐம்பது நாட்களை கடந்து வரலாறு காணாத வெற்றியை வின்சர் திரையரங்குக்கு வாரி வழங்கின. 

இவ்வாறாக சிறப்பாக இயங்கிக் கொண்டு அநேகரின் மனதையும் கொள்ளை கொண்ட புதிய வின்சர் திரை அரங்கிற்கு 1982 இல் இலங்கையில் சிறந்த திரை அரங்கு என்ற விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து 1985 ஆம் ஆண்டும் சிறந்த திரை அரங்கு விருதினைப் பெற்றிருந்தது. இவ்வாறு இரு தடவைகள் இலங்கையில் சிறந்த திரை அரங்க விருதைப் பெற்ற யாழ்ப்பாண திரை அரங்குகளின் வரிசையில் இது சிறப்பிடம் பெறுகின்றது. 

இவ்வாறாக வின்சரில் ஆரம்பத்தில் இருந்து சிறந்த புதிய திரைப்படங்கள் திரையிடப்பட்ட போதும் கிழமையில் இரு நாட்கள் எம்.கே தியாகராஜ பாகவதர், டி.பி. ராசலட்சுமி போன்றவர்களது திரைப்படங்கள் திரையிடப்பட்டன. மேலும் அக்காலத் திரைப்படங்களிலும் யாழ்ப்பாண கலாசாரத்துக்கு ஒவ்வாத சில காட்சிகளை தணிக்கை பண்ணப்பட்டு திரைப்படம் திரையிடப்பட்டது. 

மேலும் பென்கர், ராஜராஜசோழன் போன்ற சினிமாஸ் கோப் திரைப்படங்கள் வின்சரில் திரையாகி பள்ளி மாணவர்களையும் இரசிகர்களையும் கவர்ந்து வசூலில் சாதனை படைத்தவையாகும். 

இவ்வாறாக வின்சர் திரை அரங்கு சிறப்பாக மக்களின் ஆதரவைப் பெற்று இயங்கிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம், இன வன்முறை காரணமாக 1990 களில் இதன் இயக்கம் முற்றாக நிறுத்தப்பட்டது. பின் அதனை தொடங்குவதற்கு உரிமையாளர் விரும்பாத காரணத்தால் அண்மையில் அதை சதோசா நிறுவனம் குத்தகைக்கு எடுத்து பல்பொருள் அங்காடியாக மாற்றி உள்ளது.

 


 
---------------------------------------------------------------------------------------------------
 
---------------------------------------------------------------------------------------------------
 
 
 
 

© 2012 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved
Powered by Virakesari Online
Comments/Feedback: editor@yarlmann.lk
yarlmann Facebook yarlmann twitter yarlmann Video