தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் தேவஸ்தான புதிய சித்திரத்தேர் - 02.07.2012

2012-07-02 12:01:50


  Share
 
 
 


தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலயப் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு கடந்த் வெள்ளிக்கிழமை (29.06.2012) அன்று நடைபெற்றது. இதற்கான வைபவத்தின் போது கிரியைகளும் புதிய சித்திரத்தேரின் வெள்ளோட்டமும் இடம்பெற்றது. இதில் பக்த அடியார்களும் கலந்து சிறப்பித்தனர்.

ஆலய வரலாறு

தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் இவ்விடம் தனக்கு வாய்த்த இடமென்று தானாகவே வந்து அமர்ந்து கொண்டாள் என்று கூறப்படுவதுண்டு.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இக் கோவில் கொண்டருளிய இடம் அடர்ந்த ஆல மரங்கள், அரச மரங்கள், வேப்ப மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இன்றும் இம் மரங்களை இவ்விடத்தில் காணலாம். 

அன்றொரு நாள் கொழுத்தும் வெய்யிலில் ஒரு இடைப்பையன் தனது ஆடுகளை இத்தோப்பில் மேய்த்துக் கொண்டிருந்தான். அந்நேரம் ஒரு கிழவி வந்து ''மகனே தண்ணீர் தாகமாக இருக்கின்றது. அயலிலுள்ள கிணற்றில் கொஞ்சம் நீர் எடுத்துத் தருவீரா?'' என்று கேட்டாளாம். அவனும் அதற்கு சம்மதித்து பட்டை மூலம் நீர் எடுத்துக் கொடுத்தானாம். தாகம் தீர்ந்த கிழவி ''தலை கடிக்கிறது.. கொஞ்சம் பேன் பார்த்து விடுவாயா?'' என்று கேட்க, அதற்கும் அவன் சம்மதித்து, பேன் பார்க்கத் தொடங்கினான். 

தலைமயிரைப் பிரித்ததும் தலை முழுவதும் கண்களாக இருக்கக்கண்டு, அச்சமும் ஆச்சரியமும் அடைந்தான். உடனே அவன் மற்றவர்களை அழைத்து வந்து பார்த்தபோது கிழவியைக் காணவில்லை. அன்றிரவு அந்த இடைப்பையனுக்கு அம்மன் கனவில் தோன்றி ''இன்று உன்னைக் கொண்டு நீர் எடுப்பித்துக் குடித்ததும் பேன் பார்ப்பித்ததும் நான்தான். நான் அம்மன் இங்கு தங்குவதற்கு வந்துள்ளேன். எனக்கு ஒரு கொட்டில் போட்டுத் தா'' என்றாள். 

மறுநாள் பையன் தனது நண்பர்களுக்கும் உறவினருக்கும் தனது கனவைக் கூறி ஒரு சிறு கொட்டில் அமைத்து அம்மனை உருவகப்படுத்தி வழிபடத் தொடங்கினான். தலை முழுவதும் ஆயிரம் கண்களாகக் காட்சி கொடுத்ததில் எங்கள் அம்மனை ஆயிரம் கண்ணுடைய தேவி என்றும் அழைக்கத் தொடங்கினர். இது வழக்காகக் கூறப்பட்டு வரும் கதையாகும். இனி நாம் ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றினை நோக்குவோம். 

ஒல்லாந்தர் ஆட்சியும் தேவியின் கோவில் அமைப்பும் 

1658 ஆம் வருடம் ஒல்லாந்தர் வருகை என்றும் 1796 ஆங்கிலேயர் வருகை என்றும் கூறுவர். எனவே 1658 தொடக்கம் 1796 வரை ஒல்லாந்தர் ஆட்சிக்காலம் எனக் குறிப்பிடலாம். இவ்விடத்தில் நாம் 'யாழ்ப்பாணச் சரித்திரம்' (Jaffna History) என்ற ஆ.முத்துத் தம்பிப்பிள்ளை அவர்களினால் 22.07.1912 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நூலில் பக்கம் 102 இல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளதை பார்ப்போம். 

''சண்முகநாயக முதலியார் சகோதரர் சரவணமுத்து முதலியார் யாழ்ப்பாணம் மேல்பற்றுக்குப் பஞ்சாய நீதிபதியாக இருந்தார். அவர் நீதி விசாரணை செய்த இடம் சத்தியக்காடெனப்படும். அது தொல்புரத்தில் இருக்கின்றது. அவர் காலத்தில் மசூரிகா ரோகம் மிக்க உக்கிரத்தோடு பரவி ஒல்லாந்த படை வீரருள்ளும் பெரும்பாலாரைத் தாக்கியது. அப்படைக்கு வீரப்பெருமாள் என்பவர் தலைவனாகவிருந்தான். அவன் ஒல்லாந்த தேசாதிபதியிடம் அனுமதி பெற்று கோட்டைக்கு புறத்தே ஒரு மாரியம்மன் கோவிலமைத்து விழாக்கொண்டாடி அவ்வூரில் மிக்க உக்கிரத்தோடு பரவிய ரோகத்தைச் சாந்தி செய்வித்தனர். அக் கோயில் இன்றும் பிரசித்தியோடு விளங்குகின்றது''.

எனவே பதிவேடுகளுக்கு அமைய 1650 ஆம் ஆண்டளவில் சற்று முன்போ பின்போ அழகக்கோன் முதலியார், சரவணமுத்து முதலியார் என்பவரால் சுட்ட செங்கற்களால் இக் கோவில் அமைக்கப்பட்டதென்றும் பின்னர் 1862 ஆண்டளவில் குறிப்பிட்டவர்களின் வழித்தோன்றல் இராமலிங்கம் கைலாயபிள்ளை என்பவரால் பொது மக்கள் செலவில் கற்களால் இக் கோவில் கட்டப்பட்டது என்றும் கூறுவர். (ஆதாரம்: Temple Register 1883, Kachcheri, Jaffna). 

மேலும் இப்பதிவுகளுக்கு அமைய வழக்கம்பரை என்று அழைக்கப்படும் நிலத்தில் 'தொல்புரம் முத்துமாரியம்மன் கோவில்' என்ற பெயரில் விளங்கியதாகவும் கூறப்படுகின்றது. அக்காலத்திலேயே 1500 ஆட்களுக்கு மேற்பட்டோர் திருவிழா காலத்தின் போது இக்கோவிலில் கூடுவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தனை பிரசித்தம் பெற்ற தலமாக இருந்துள்ளது.

இதனிடையில் 1830 ஆம் ஆண்டு ஆடி மாதம் 10 ஆம் திகதியில் இக் கோவிலின் பூசை சம்பந்தமாக ஓலையில் எழுதப்பட்ட ஒப்பந்தமொன்று காணப்படுவதற்கான சான்றுகளும் தென்படுகின்றது. எனவே 1650, 1830, 1862 போன்ற ஆண்டுகள் இக்கோவிலோடு சம்பந்தப்பட்ட முக்கிய ஆண்டுகளாக இன்றும் நமக்கு தென்படுகின்றது. 

இவ்வாறு காலப்போக்கில் அம்பிகை அடியவர்களின் ஆதரவு பெருக கோவில் திருப்பணி வேலைகள் நிர்வகிப்போரால் செய்யப்பட்டன. வசந்த மண்டபம், கோபுரம் போன்றவை அமைக்கப்பட்டன. காணிகளும் கொடுக்கப்பட்டன. கிணறுகள், மடங்கள், கேணிகள் கட்டப்பட்டன. கோவிலும் மென்மேலும் பிரசித்து பெற்று விளங்கலாயிற்று. 

கோவிலில் ஆரம்ப காலம் தொட்டு 06.04.1988 திகதி வரை 3 முறையான கும்பாபிஷேகம் நடந்துள்ளதாக பேசப்படுகின்றது. இதில் 1950 ஆம் ஆண்டு பங்குனியில் நடைபெற்றது 3 ஆவது கும்பாபிஷேகம் என்றும் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து 06.04.1988 இல் மிகப் பெரும் செலவில் கோவில் புனருத்தாரணம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இதனிடையில் 07.07.1985 எமது ஆலய வளர்ச்சியின் பொன்னாள் இந்நாளின் மாலையில் ஆலய மண்டபத்தில் ஆலய உபயகாரர்கள், திருப்பணி செய்தோர், வழிபடுவோர், பூசகர்கள், முன்னைய தர்மகர்த்தா ஆகியோர் என்று கூடி ஒரு பரிபாலன சபை அமைத்திட வேண்டும் என்ற நன்முடிவை எடுத்தனர். 

இதனைத் தொடர்ந்து 18.08.1985 இல் மீண்டும் ஒன்று கூடிய மேற்குறிப்பிட்டோர் யாப்பு விதியொன்றை அடிப்படையாகக் கொண்டு பரிபாலன சபையை உருவாக்கினர். அன்றிலிருந்து இன்றைய திகதி வரை இப்பரிபாலன சபை 'தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் தேவஸ்தான பரிபாலன சபை' என்ற பெயரில் கோவிலை பரிபாலனம் செய்து வருகின்றது. இது ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதினால் தேவஸ்தான அதியுயர் நிர்வாக அலகாக விளங்குகின்றது. 

இச்சபை பெறுப்பேற்றதன் பின்னர் முழுகோவிலுமே புதுப்பித்து கட்டப்பட்டு இராஜகோபுரம் வில்விமான முகப்பு, சித்திரத்தேர், தேர்மேடை தேர் தரிப்பிடம் ஆகியவை கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு ஆலயம் புதுப்பொலிவுடன் விளங்குகின்றது. 

வருங்காலத்திலும் பல சீரிய பணிகளை மேற்கொள்ள பரிபாலன சபை பல விதத்திலும் திட்டங்களை வரைந்து கொண்டிருக்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தேவஸ்தான பரிபாலன சபையின் செய்தி:

புத்தம் புதிய திராவிட மரபு ருத்திராகர வடிவ அமைப்;புக் கொண்ட சிற்பத் தேரில் இன்றைய தினம் 02.07.2012 திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு எல்லாம் வல்ல எம் தேவி ஆரோகணம் செய்திட திருவருள் கைகூடியுள்ளது. இன்றைய நாள் ஒரு பொன்னாளாகும். 

அம்பாள் அடியார்களின் அழப்பரிய பங்களிப்பினால் இத்திருப்பணியைச் செய்திட பரிபாலன சபை தீர்மானித்தது. இது ஒரு நாளில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. பல வருடங்களாக ஆலோசனையில் இருந்து இறுதியில் செயல் வடிவம் பெற ஆரம்பித்தது. இதற்காக ஸ்ரீகாளிகா சிற்பாலய உரிமையாளர், ஸ்தபதி செ.பாலச்சந்திரன் ஆச்சாரியார் அவர்களுடன் ஓர் ஒப்பந்த உடன்படிக்கையைச் செய்து, 2010 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் நாள் வேலை ஆரம்பமாகியது. 

2012 ஆனி மாத வருடாந்த மகோற்சவத்தில் தேர் வீதியுலா வரவேண்டும் என்ற எண்ணத்துடன் நாம் இருபகுதியாரும் செயலில் இறங்கினோம். இதன் விளைவு இன்று எம் கண்முன் காட்சி தரும் இச்சிற்பத் தேராகும். இதன் கம்பீரமான உயரம் 27 அடி 9 அங்குலம் ஆகும். ஒரு சிறந்த தேருக்குரிய கம்பீரமான அம்சங்கள் அனைத்தும் நிறைந்தது. 

இதனை அமைத்திட எடுத்த காலம் சுமார் இரண்டு வருடங்கள். இதனை இத்தனை சரத்தையுடன் அமைத்துத் தந்த ஸ்தபதியின் குழுவினருக்கு எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். சித்திரத் தேர் மட்டும் அமைத்திடும் பணியில் எமது பரிபாலனசபை நிறுத்திக் கொள்ளாது, இத்தேரினை நிறுத்தி வைத்திருப்பதற்கு ஒரு தேர் தரிப்பிடத்தினையும் புதிதாக நிர்மாணித்துள்ளோம்.

அதுமட்டுமின்றி பிரம்மாண்டமான ஒரு தேர் மேடையையும் அமைத்துள்ளோம் இவற்றையெல்லாம் அமைத்திட அம்பாள் அடியார்கள் செய்திட்ட பணக்கொடை பெரிய விடயமாகும். நாம் கேட்கும் போதெல்லாம் அடியார்கள் அளித்த கொடை பெருங்கொடையாகும். 

இவற்றையெல்லாம் பின்புலத்தே கொண்ட சிற்பத்தேர், புதிய தேர் தரிப்பிடம், புதிய தேர் மேடை என்பவை நாம் காண்பது கனவல்ல நனவே என்பதை எம் எல்லோர்க்கும் உணர்த்தி நிற்கின்றன. 

அம்பாளின் கருணையே கருணை அம்பாளின் அருளும் கடாட்சமும் எல்லோருக்கும் கிடைத்திடுவதாக.

 


 
---------------------------------------------------------------------------------------------------
 
---------------------------------------------------------------------------------------------------
 
 
 
 

© 2012 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved
Powered by Virakesari Online
Comments/Feedback: editor@yarlmann.lk
yarlmann Facebook yarlmann twitter yarlmann Video