இவர் சாலிவாகன சகாப்தம் கஎகூருக்குச் சமமான சுபகிருது மாசி மாதத்திலே வல்வெட்டித்துறையென்னும் ஊரிலே பரதவ குலத்திலே சங்கரக்குரிசிலுக்குப் புதல்வராகப் பிறந்தனர்.
இவர் உரிய காலத்திலே வித்தியாரம்பஞ் செய்யப் பெற்று அவ்வூரிலுள்ள ஒரு வித்தியாசாலையிலே சென்று கல்விகற்றனர். பின் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரிடஞ் சென்று இலக்கிய இலக்கணங்களைக் கற்றுப் பாண்டித்தியம் அடைந்து தென்னிந்தியநாடு சென்று சமஸ்கிருத நூல்களையுங் கற்று அவற்றிலும் தேர்ச்சியுடையராயினர்.
இலக்கண இலக்கியங்களிலன்றித் தருக்கம் ஜோதிஷம், வானசாஸ்திரம் முதலிய கலைகளிலும் இவர் சிறந்து விளங்கினார். தமிழினும் சமஸ்கிருதத்தினும் கவிகளியற்றும் வன்மையுமுடையராயினர். சில புலவர்க்கு சமஸ்கிருத சுலோகத்தாலும் பாயிரம் அளித்துள்ளார்.
சிவஞானபோதம் சிவஞானசித்தியார் முதலிய சந்தான சைவசாஸ்திரங்களையும் கற்றறிந்தார். சைவ சமயத்திலே மிகுந்த அபிமானமுடையவராதலினாலே அதனை விருத்திசெய்யும் படி 'சைவாபிமானி' என்னும் பெயரோடு ஒரு பத்திரிகை நடத்தி வந்தார்.
அக்காலத்திலே சென்னையிலிருந்த ராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளையவர்கள் எழுதிய சைவமகத்துவம் என்னும் நூலுக்கு மாறாக ஸ்ரீ அருளப்பமுதலியார் எழுதிய சைவமகத்துவதிக்காரம் நிக்கிரகம் என ஒரு கண்டனமெழுதி முதலியார் வாயைஅடக்கினார்.
அதனால் தாமோதரம்பிள்ளையவர்களும் சென்னையிலுள்ள மற்றும் அறிஞர்களும் இவரைப் போற்றி இவர்க்கு இயற்றதமிழ்ப் போதகாசிரியர் என்னும் பட்டப்பெயரை அளித்தனர் என்ப.
ஈழமண்டத்திலே அட்டாவதானத்தை முதலிற் செய்து பெயர்பெற்ற வல்வை ஏகாம்பரம் என்பவர்கும் இவர் மிக அணுகிய சுற்றத்தவரென்றுங் கூறுவர். இவரிடங் கல்விகற்ற மாணவர்களுட் சிலர் இன்னும் இலைமறைகாய்போல வல்வையிலும் மற்றுமூரிலும் அங்கங்கே காணப்படுகின்றனர்.
இவர் சைவாசாரத்திற் சிறந்து விளங்கியதோடு தம்மவர் பலரையுஞ் சைவாசாரமுஞ் சிவபக்தியுமுடையராய் விளங்கவும் செய்தனர். தாம் நடாத்திய பத்திரிகையை அச்சிடுதற்பொருட்டும் தாம் இயற்றிய நூல்களை அச்சிடுதற்பொருட்டும் ஓரச்சியந்திரத்திரத்தையும் தமதூரிலே தாபித்து வைத்திருந்தனர்.
இவரியற்றி அச்சிட்டு வெளிப்படுத்திய செய்நூல்கள்: சிந்தாமணி நிகண்டு, செல்வச்சந்நிதி முறை, வல்வை வயித்தியேசர் பதிகம், சாதிநிர்ணயபுராணம் என்பனவாகும். இவரியற்றிய உரைகள்:கந்தபுராணத்து அண்டகோசப்படலவுரை, தெய்வயானை திருமணப்படலவுரை, வள்ளியம்மை திருமணப்படலவுரை, கல்வளையந்தாதியுரை, கந்தரலங்காரவுரை என்பனவாகும். சூரபன்மன் வதைப்படத்திற்கும் உரையியற்றி அச்சிட்டு வந்தனர். அது முற்றுப்பெறவில்லை போலும்.
இவர் திருத்தி அச்சிட்ட நூல் நாற்கவிராசநம்பியகப்பொருள்விளக்கவுரையாகும். இவரியற்றிய கவித்திறமுணர ஒரு கவியை இங்கே காட்டுதும்: