"வரும்.... ஆனா.... வராது...." என்பது ஒரு பிரபல்யமான தென்னிந்திய சினிமா நகைசசுவை வசனம். ஆனால், வன்னி மக்களைப் பொறுத்த வரை இது ஒரு வேதனைக்குரிய வசனமாகவே காணப்படுகிறது.
அதாவது இந்தியாவின் வீட்டுத்திட்டம் தொடர்பில் அதன் நிலைப்பாடு மேற்படி வசனம் போன்றே காணப்படுகிறது. இந்திய அரசும் இலங்கை அரசும் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பில் மேற்படி வசனத்தை ஒத்ததாகவே செயற்பட்டு வருகின்றனர்.
ஆனால் யுத்தத்தின் முழுப் பாதிப்பினையும் சுமந்த கிளிநொச்சி முல்லைத்தீவு மக்கள் இந்திய வீட்டுத்திட்டத்தை இலவு காத்த கிளியாக எதிர்பார்க்கின்றனர்.
மீள் குடியேற்றப்பட்டு மூன்று வருடங்கள் ஆகி விட்ட நிலையில் இந்திய அரசு வடக்கில் மீள்குடியேறிய மக்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகளை அமைத்து தருவதாக பெரும் எடுப்பில் கூறினார்கள். ஆனால் கிளிநொச்சியில் பளை, அறிவியல்நகர் போன்ற பிரதேசங்களில் ஓரிரு இடத்தில் அமைக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களைத் தவிர இதுவரைக்கும் கூறப்பட்டமைக்கு அமைவாக எந்தவொரு வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை.
அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் எல்லோரும் வீட்டுத்திட்டம் தொடர்பில் மக்களின் கேள்விகளுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தினையே பதிலாகக் கூறி வருகின்றனர். ஆனால் எந்தளவுக்கு எப்பொழுது நடைமுறையில் சாத்தியப்படும் என்பதுதான் தற்பொழுது மக்களிடம் இருக்கும் மிகப்பெரும் கேள்வியாகவுள்ளது.
வன்னியில் தற்பொழுது யுத்தத்தின் பாதிப்புக்களுக்கு உள்ளாகி வீடுகளை இழந்த மக்களில் பெரும்பாலானவர்கள் தற்பொழுதும் காலாவதியாகிவிட்ட நிறுவனங்களின் தற்காலிகக் கொட்டகைகளிலும் சிதைந்து போன கொட்டில்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் மீண்டுமொரு பருவ மழைக்கு முகம்கொடுக்க போகின்றார்கள். அப்பொழுது மீண்டும் ஒரு பருவ மழையின் அவலம் ஏற்படபோகிறது இது தவிர்க்க முடியாதது.
ஏற்படபோகின்ற அவலம் இந்த வருடத்திலாவது முடிவுக்கு வரவேண்டும் என்பதுதான் மக்களின் வேண்டுதலாகவுள்ளது. அந்த வேண்டுதல் பலிப்பதும் பலிக்காததும் இந்திய மற்றும் இலங்கை அரசுகளின் கைகளிலேயே தங்கியுள்ளது. ஏனெனில் அதிகாரிகளின் தகவல்களின் படி வீட்டுத்திட்டம் தொடர்பில் தற்பொழுது கைவசம் இந்திய வீட்டுத்திட்டமே உள்ளது.
யுத்தத்தின் பாதிப்புக்களை முழுமையாக சுமந்த மாவட்டமான கிளிநொச்சியில் மாவட்டச்செயலகத் திட்டமிடல் பிரிவின் தகவல்களின் படி சேதமடைந்த வீடுகளின் தொகை 35823. இதில் முழுமையாக சேதமடைந்த வீடுகள் 26867. பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் 8956.
இவற்றில் இதுவரைக்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளினால் பூர்த்தி செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 8912. இதனை விட சில மக்கள் தாங்களாகவே சுயமாக வீடுகளைக் கட்டியவர்கள் போக கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்னமும் 24263 வீடுகள் தேவைப்படுகின்றன. இதில் முழுமையாகச் சேதமடைந்த வீடுகள் 18427 வீடுகளும் பகுதியவில் சேதமடைந்த வீடுகள் 5836 வீடுகளும் உள்ளடங்குகின்றன.
கிளிநொச்சியினைப் பொறுத்தவரை முழுமையாகச் சேதமடைந்த வீடுகள் 18427 உள்ளபோதும் தற்போது அரசிடம் இருக்கும் ஒரேயொரு வழி இந்தியன் வீடுகளே. அதிலும் கிளிநொச்சிக்கு கிடைக்க இருப்பது 7000 இந்தியன் வீடுகள் மட்டுமே. எனவே மாவட்டத்தின் வீட்டுத்தேவைகளை இந்தியன் வீட்டுத்திட்டம் கிடைத்தாலும் முழுமையாகத் தீர்த்து வைக்கமுடியாது.
நிலைமை அப்படியிருக்க இந்தியன் வீட்டுத்திட்டம் இப்பொழுது வருமா? வராதா? என்பதே தற்பொழுது மக்களிடம் இருக்கும் மிகப்பெரும் கேள்வி. குழந்தை பிள்ளைக்கு இனிப்பைக் காட்டுவதைப் போன்று அரசு இந்திய வீட்டுத்திட்டதை வன்னி மக்களுக்கு காட்டுகிறது.
அதிகாரிகளோ வரும் ஆனா... என்பதோடு நிறுத்தி விடுகின்றார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் எதுவும் புரியாத நிலையில் எதிர்வரும் பருவ மழையை எதிர்பார்த்து அஞ்சிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் இந்தியன் வீட்டுத்திட்டம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு குறிப்பாக வன்னி மக்களை பொறுத்தவரை இலவு காத்த கிளியின் கதையாகவேயுள்ளது.